தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறையில் கேரள ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்த விவகாரம்! தமிழக அரசுக்கு அதிரடி உத்தரவு! - KERALA AUTO DRIVER DEAD ISSUE

காவலர்கள் தாக்கியதில் சிறையில் உயிரிழந்த கேரளா மாநிலத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் குடும்பத்துக்கு, ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 20, 2024, 7:34 AM IST

சென்னை: காவலர்கள் தாக்கியதில் சிறையில் உயிரிழந்த கேரளாவை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் விவகாரத்தில், மதுக்கரை காவல்துறை ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் இரு தலைமை காவலர்கள் மீது ஒழுங்கு நடிவடிக்கை எடுக்க மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கேரளாவைச் சேர்ந்த பிந்து யோகேஷ் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் அளித்துள்ள மனுவில், "ஆட்டோ ஓட்டுநரான தனது கணவரை ஹவாலா மோசடி வழக்கில், கோவை மதுக்கரை காவல்துறையினர் சட்ட விரோதமாக கைது செய்தனர். இந்த வழக்கில் இருந்து விடுவிக்க உதவி ஆய்வாளர் ரூ.70 ஆயிரம் லஞ்சமாக பெற்றுள்ளார்.

வழக்கிலுருந்து தனது கணவரை விடுவிப்பதாக கூறிய நிலையில், உடல்நிலை சரியில்லாமல் அவர் சிறையில் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. ஆனால், அவரது உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் உள்ளது. எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கில் மதுக்கரை காவல்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், "கடந்த 2018ஆம் ஆண்டு யோகேஷ் மீது ஐபிசி 395 பிரிவின் கீழ் (மோசடி) வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். பின்னர், கைது செய்யப்பட்ட இரவு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவ கல்லூரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதையும் படிங்க:சிபிசிஐடி கைக்கு போகும் ரவுடி திருவேங்கடம் என்கவுன்டர் வழக்கு.. ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்!

இதனையடுத்து, ஆறு நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் சிறை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால், அங்கு யோகேஷூக்கு மூச்சு திணறல் ஏற்பட்ட நிலையில், அவரது சகோதரருக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அன்று இரவு யோகேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்," என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இவ்வழக்கை விசாரித்த மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் கண்ணதாசன், "மருத்துவ அறிக்கையின் படி யோகேஷின் உடலில் பல காயங்கள் இருந்துள்ளது. காவல்துறையினரின் தாக்குதலால் உயிரிழந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதனால், உயிரிழந்த யோகேஷின் மனைவிக்கு ரூ.5 லட்சம் இழப்பீட்டை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும்," என்று உத்தரவு பிறப்பித்தார். தொடர்ந்து, மதுக்கரை காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் இரு தலைமை காவலர்கள் மீது ஒழுங்கு நடிவடிக்கை எடுக்க பரிந்துரை செய்து உத்தரவிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details