மதுரை:மதுரை மாநகரில் கோலாகலமாக கொண்டாடப்படும் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி திருக்கல்யாணம் ஏப்ரல் 21ஆம் தேதி நடைபெறும் என கோயில் நிர்வாகம் அறிவித்த நிலையில், மீனாட்சியம்மன் திருக்கல்யாணத்தை பக்தர்கள் காண்பதற்கு வசதியாக கட்டணம் முன்பதிவு தேதியையும் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலின் புகழ் பெற்ற சித்திரைப் பெருவிழா, வருகின்ற ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 23ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதன் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உற்சவம், ஏப்.21ஆம் தேதி கோயிலின் வடக்காடி வீதியில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் காலை 8.35 மணி முதல் 8.59 மணிக்குள் நடைபெறவுள்ளது.
திருக்கல்யாண உற்சவத்தினை தரிசிக்க விரும்பும் பக்தர்களின் வசதிக்காக, ரூபாய் 200 மற்றும் ரூபாய் 500க்கான கட்டணச்சீட்டுகள் பெற்றவர்கள் வடக்கு கோபுரம் வழியாகவும் மற்றும் கட்டணமில்லா தரிசன முறையில் முதலில் வருபவர்களுக்கு முதலில் அனுமதி (First Come First Serve) என்ற அடிப்படையில், பக்தர்கள் கொள்ளளவிற்கேற்ப தெற்கு கோபுரம் வழியாகவும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.
திருக்கல்யாண நிகழ்வில் பங்கேற்று அம்மனைத் தரிசிக்க விரும்பும் பக்தர்களின் வசதிக்காக, இந்து சமய அறநிலையத்துறை இணையதளமான https://hrce.tn.gov.in மற்றும் இத்திருக்கோயிலின் இணையதளமான https://maduraimeenakshi.hrce.tn.gov.in ஆகியவற்றில் ஏப்.9ஆம் தேதி முதல் ஏப்.13ஆம் தேதி இரவு 9.00 மணி வரை ரூ.500 மற்றும் ரூ.200 கட்டணச்சீட்டு முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ரூ.500 மதிப்பிலான கட்டணச்சீட்டு பதிவில் ஒருவர் இரண்டு கட்டணச்சீட்டுகள் மட்டுமே பதிவு செய்ய அனுமதிக்கப்படுவர். ரூ.200 மதிப்பிலான கட்டணச்சீட்டு பதிவில் ஒருவர் மூன்று கட்டணச்சீட்டுகள் மட்டுமே பதிவு செய்ய அனுமதிக்கப்படுவர். ஒரே நபர் ரூ.500 மற்றும் ரூ.200 கட்டணச் சீட்டுகள் இரண்டையும் பதிவு செய்ய இயலாது. பிறந்த தேதி சரியாக பூர்த்தி செய்யப்பட வேண்டும். ஒரு பதிவிற்கு ஒரு கைபேசி எண் மட்டுமே பயன்படுத்த இயலும்.
எனவே ஒரு கைபேசி எண்ணில் ஒரு நபர் ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகள் செய்ய இயலாது. பாதுகாப்பு காரணங்கள் கருதி குழந்தைகளை அழைத்து வருவதை தவிர்க்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், பக்தர்களின் வசதி மற்றும் விருப்பத்திற்கிணங்க, இத்திருக்கோயிலுக்குச் சொந்தமான மேற்கு சித்திரை வீதியில் உள்ள பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியில் மேற்படி நாட்களில் நேரடியாக திருக்கோயில் பணியாளர்களைக் கொண்டு ரூ.500 மற்றும் ரூ.200 கட்டணச்சீட்டுகள் முன்பதிவு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.