சென்னை: பாகிஸ்தானை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஆயிஷா ரஷான், கடந்த 10 ஆண்டுகளாக இருதய நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு இருதய நோய்க்கு சிகிச்சை பெற தனது தாயார் சனோபருடன் இந்தியா வந்துள்ளார். ஆயிஷா ரஷானின் இருதயம் செயலிழக்காமல் இருக்க சென்னையில் உள்ள எம்ஜிஎம் ஹேல்த்கேர் மருத்துவமனையில் இருதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவைச் சிகிச்சை பிரிவு இயக்குநர் டாக்டர் கே.ஆர்.பாலகிருஷ்ணன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் இருதயத்தில் பம்ப் கருவி பொருத்தியுள்ளனர்.
இந்நிலையில், இருதயத்தில் பொருத்தப்பட்ட பம்ப் கருவி திடீரென செயலிழக்கத் தொடங்கி உள்ளது. இதையடுத்து மீண்டும் மருத்துவ சிகிச்சைக்காக ஆயிஷா ரஷான் இந்தியா அழைத்து வரப்பட்டார். இந்த முறை ஆயிஷாவை பரிசோதித்த டாக்டர் கே.ஆர்.பாலகிருஷ்ணன் தலைமையிலான மருத்துவ குழுவினர், இருதயத்தின் பம்பில் லீக் இருப்பதாகவும் இருதய மாற்று அறுவைச் சிகிச்சை அவசியம் என்றும் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
மேலும் ஆயிஷாவுக்கு எக்மோ கருவி பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருதய மாற்று அறுவைச் சிகிச்சை உள்ளிட்ட மருத்துவ நடைமுறைகளுக்கு 35 லட்ச ரூபாய் வரை செலவு ஆகலாம் என மருத்துவமனை தரப்பில் ஆயிஷாவின் தாயாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. போதிய பண வசதி இல்லாததால் ஆயிஷாவின் பெற்றோர் தயக்கம் காட்டியுள்ளனர்.
இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் ஐஸ்வர்யம் டிரஸ்ட்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஐஸ்வர்யம் டிரஸ்ட் மற்றும் எம்ஜிஎம் மருத்துவமனை சார்பில் ஆயிஷாவுக்கு முற்றிலும் இலவசமாக மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன் டெல்லியில் இருந்து ஆயிஷாவுக்கு இருதயம் கிடைத்த நிலையில், வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
தற்போது ஆயிஷா நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆயிஷாவின் அறுவைச் சிகிச்சைக்காக அவரது குடும்பத்தினர் கடந்த 18 மாதங்களாக இந்தியாவில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, மருத்துவமனை நிர்வாகம் மற்றும் மருத்துவக் குழுவினருக்கு நன்றி தெரிவித்த ஆயிஷாவின் தாயார் சனோபர், "பாகிஸ்தானில் மருத்துவ உள்கட்டமைப்பு முற்றிலும் மோசமாக உள்ளது. உண்மையை சொல்ல வேண்டுமானால் இந்தியாவை காட்டிலும் பாகிஸ்தானில் சிறந்த மருத்துவ வசதிகள் இல்லை. இந்தியா மிகவும் நட்பாக இருப்பதாக உணர்கிறேன். பாகிஸ்தானில் இருதய மாற்று அறுவைச் சிகிச்சைக்கான வசதி இல்லை என்று மருத்துவர்கள் கூறியபோது, டாக்டர் கே.ஆர்.பாலகிருஷ்ணனை அணுகினோம், சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் இந்தியாவுக்கு நன்றி" என உணர்ச்சி பொங்க கூறினார்.
இதையும் படிங்க :இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: தேர்தல் ஆணையத்தின் விளக்கம் என்ன? உச்ச நீதிமன்றத்தின் முடிவு என்ன? - EVM VVPAT Case