சென்னை: பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியது முதல் சிஎம்டிஏ திட்டம் குறித்த போலி ஆவணங்கள் குற்றச்சாட்டு வரை 8 வழக்குகளில் கைதாகி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சவுக்கு சங்கர் மீது குண்டாஸ் சட்டமும் பாய்ந்துள்ளது. பொதுவாக அடிதடி, கொலை மற்றும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அக்கியூஸ்ட்கள் மீது குண்டாஸ் போடப்படும். ஆனால், சோசியல் மீடியாவில்அவதூறாக பேசி கைதானவர் மீதும் குண்டாஸ் போட முடியுமா என்ற கேள்வி பலருக்கு எழலாம். இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சத்தியராஜ் ராஜமாணிக்கம் ஈடிவி பாரத் தமிழுக்கு அளித்த பேட்டியில் விளக்கி உள்ளார்.
வழக்கறிஞர் சத்தியராஜ் ராஜமாணிக்கம் கூறியதாவது:
பொதுவாக ஒருவர் கைது செய்யப்படும்போது, அவர் மீது மேலும் வழக்குகள் அதிகமாகும்பட்சத்தில் எதிர்கால குற்ற செயல்களை தடுக்க, சம்பந்தப்பட்ட நபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் போடப்படும். மேலும், அந்த நபர் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தாலோ, போதைப் பொருள் குற்றவாளிகளாக இருந்தாலோ, சைபர் குற்றவாளிகளாக இருந்தாலோ பாலியல் குற்றவாளிகளாக இருந்தாலோ அவர மீது குண்டர் தடுப்புச் சட்டம் போட முகாந்திரம் உள்ளது...
சவுக்கு சங்கரை பொறுத்தவரை, கடந்த 2022 ஆம் ஆண்டே நீதித் துறை குறித்து அவதூறாக பேசி ஆறு மாதம் சிறை தண்டனை பெற்றவர். இந்நிலையில் தற்போது பெண் காவலர்களை பற்றி அவதூறாக பேசிய வழக்கில் கைதாகியுள்ளார். மேலும், அவர் கைதான பிறகு கஞ்சா வழக்கு, சைபர் குற்றம், சிஎம்டிஏ விவகாரம் உட்பட 8 க்ரைம் நம்பர்கள் அடுத்தடுத்து அவர் மீது பதிவாகியுள்ளதால் குண்டர் தடுப்புச் சட்டத்தில் அவரை கைது செய்ய முகாந்திரம் இருந்துள்ளது.