சென்னை: 'மெட்ராஸ் டே' என்பது ஆண்டு தோறும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி சென்னை மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 1639 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22 ஆம் நாள் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி சென்னையை கண்டுபிடித்தனர் என்று கூறப்படுகிறது அந்த நாளை கடந்த 2004 ஆம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு வருடமும் சென்னை மக்களால் 'மெட்ராஸ் டே' என்று விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இப்படிப்பட்ட சென்னை, புலியூர் கோட்டம் என்ற பெயரில் தான் இருந்தது என்று கேட்டால் நம்மால் நம்ப முடியுமா? ஆம். சென்னையின் முந்தைய பெயர் 'புலியூர் கோட்டம்' இந்த பெயர் எவ்வாறு வந்தது? பின்னர் சென்னையாக உருமாறியது என்பதை ஈடிவி பாரத் வாயிலாக எடுத்துரைக்கிறார் வரலாற்று ஆராய்ச்சியாளர் ரங்கராஜன்.
பழங்குடிகள் ஆட்சி செய்த சென்னை: "புலியூர் கோட்டம் என்பதே சென்னையின் பழைய பெயர், திருமயிலை, திருவான்மியூர், வேளச்சேரி, மணிமங்கலம், மாங்காடு, திருநீர்மலை உள்ளிட்ட முக்கிய நகரங்கள் அனைத்தும் புலியூர் கோட்டம் என்ற பிரிவில் உள்ள ஊர்கள் என்று கூறும், ரங்கராஜன், சென்னையை ஆட்சி செய்தவர்கள் குறும்பர்கள் என்று சொல்லகூடிய பழங்குடியினத்தவர்கள் என்ற தகவலையும் நமக்கு அறிமுகம் செய்கிறார்.
பழங்குடியினர் தாங்கள் ஆட்சி செய்த பகுதியை 24 கோட்டங்களாகப் பிரித்ததாகவும் அதில், ஒன்று தான் தற்போது நாம் சென்னை என்று அழைக்கும் புலியூர் கோட்டம் என்றும் அதன் கீழ் ஆதம்பாக்கம், ஆலந்தூர், வேளச்சேரி, தாம்பரம், மணிமங்கலம், மயிலாப்பூர், திருவான்மியூர், அண்ணாநகர் பகுதிகள், மணலி போன்ற இடங்கள் அவற்றின் கீழ் இருந்துள்ளது. சென்னைக்கு அருகிலுள்ள திருவள்ளூர் மாவட்டப் பகுதிகள் புழல் கோட்டம் என்று அழைக்கப்பட்டது என வரலாற்று உண்மைகளை எடுத்துரைத்து ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.
இதற்கான ஆதாரங்களாக கர்னல் மெக்கென்சி என்ற ஆங்கிலேயர் இந்தியாவின் முதல் சர்வேயர் ஜெனரலாக பணியாற்றியதையும், அவர் திரட்டிய ஆவணங்கள், வரலாற்று குறிப்புகள் தற்போது சென்னை அண்ணா நூலகத்தில் உள்ள 'oriental manuscripts' என்ற பிரிவில் மெக்கென்சியின் தொகுப்புகளாக உள்ளதை எடுத்துரைத்தார்.
சித்தராமையாவின் முன்னோர்கள் ஆண்ட சென்னை:2000 ஆண்டுகளுக்கு முன்னர் குறும்பரால் இந்த புலியூர் கோட்டம் ஆட்சி செய்யப்பட்டிருக்கிறது. அவர்கள் தற்போது அதிகமாக நீலகிரி மாவட்டத்திலும், கர்நாடக பகுதிகளிலும் வசிக்கின்றனர். தற்போது கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் மூதாதையர்கள் இந்த குறும்பர் வழி தோன்றலில் வந்தவர்கள் தான் என்ற புதிய தகவலை கூறினார்.