ஈரோடு:ஈரோட்டில் இயங்கி வரும் பிரபல கட்டுமான நிறுவனம், ஈரோடு நகரின் பல்வேறு பகுதிகளில் வீட்டு மனைகள் மற்றும் வீடுகள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் உரிமையாளராக ஈரோடு மாநகராட்சியின் திமுக கவுன்சிலர் ஆதி ஸ்ரீதர் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள ஆர்.என்.புதூர், பெருமாள் மலையின் பின்பகுதியில் சுமார் 24 வீடுகள் கட்டி இந்த நிறுவனம் விற்பனை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது அங்கு 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில், குடிநீர், தெரு விளக்கு, சாக்கடை உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை என்று அப்பகுதி குடியிருப்புவாசிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.
இது குறித்து பலமுறை சம்பந்தப்பட்ட நிறுவத்தின் உரிமையாளரை அணுகிய போது, வீடுகளை மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்து விட்டதாக கூறியதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்துக் குடியிருப்புவாசிகள் கூறுகையில் "கடந்த 2019ஆம் ஆண்டு ஆதி பில்டர்ஸ் என்ற கட்டுமான நிறுவனத்திடம் வீடுகளை வாங்கினோம்.
அப்போது எங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை விரைவில் செய்து கொடுப்பதாகத் தெரிவித்தனர். இந்த பகுதியில் மொத்தம் 24 குடும்பங்கள் கடந்த 2 வருடங்களுக்கு மேலாக வசித்து வருகிறோம். ஆனால் எங்களுக்குத் தேவையான குடிநீர், தெருவிளக்கு வசதி, சாக்கடை உள்ளிட எந்த அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை.