தருமபுரி:கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக, கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருவதால், தமிழகத்திற்கு வரும் நீரின் அளவும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
நீர்வரத்து அதிகரிப்பு:தொடர் கனமழையின் காரணமாக, கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது முழுக் கொள்ளளவை எட்டியது. இந்நிலையில், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து ஒரு லட்சத்து 80 ஆயிரம் கனஅடியாக இருந்தது. பிற்பகல் 12 மணி நிலவரப்படி, நீர்வரத்து ஒரு லட்சத்து 90 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
2 லட்சம் கன அடி:இன்றைய நிலவரப்படி, கர்நாடக மாநிலம் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் கன அடி தண்ணீரும், கபினி அணையில் இருந்து 50 ஆயிரம் கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. கர்நாடக அணையில் இருந்து மொத்தம் 2 லட்சத்து 15 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால், இன்னும் இரு நாட்களுக்கு ஒகேனக்கல் பகுதியில் நீரின் அளவு 2 லட்சம் கன அடியைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு லட்சத்து 90 ஆயிரம் கன அடியை நீர்வரத்து தொட்டது குறிப்பிடத்தக்கது. தண்ணீர் வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல்லில் உள்ள அருவிகள் தண்ணீரில் மூழ்கி காணப்படுகிறது. உயரமான மரங்களைத் தவிர்த்து, மற்ற இடங்கள் தண்ணீரில் மூழ்கி, பறந்து விரிந்து அகண்ட காவிரி ஆறாக காட்சியளிக்கிறது.