தருமபுரி:கர்நாடகா மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து உபரி நீர் அதிக அளவு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஒகேனக்கல்லில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் வீடியோ (Credits - ETV Bharat Tamil Nadu) குறிப்பாக கர்நாடகாவின் கபினி அணையில் இருந்து விநாடிக்கு சுமார் 40 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 45 ஆயிரம் கனஅடி தண்ணீர் வருகிறது.
இந்த ஆண்டில் காவிரியில் முதல் முறையாக விநாடிக்கு நீர்வரத்து 45 ஆயிரம் கனஅடி நீர் வரும் நிலையில், ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால், பாதுகாப்பு கருதி காவிரி கரையோரங்களில் வசிக்கும் கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதோடு, அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் விதித்த தடை தொடர்கிறது. காவிரி கரையோரங்களில் வருவாய் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை அதிகாரிகள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: தமிழகத்திற்கு புயல் எச்சரிக்கை? என்ன சொல்கிறது வானிலை அறிக்கை!