தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் தரம் உயர்த்தப்படும்: அமைச்சர் அறிவிப்பு.! - Minister Anbil Mahesh announcement

காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கல்வி ரூ.2.32 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படுவது உள்ளிட்ட பள்ளிக்கல்வித் துறையின் 25 புதிய அறிவிப்புகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார்.

பள்ளி மாணவிகள், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
பள்ளி மாணவிகள், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி (Image Credits - ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 24, 2024, 5:35 PM IST

சென்னை:தமிழகத்தில் துறைவாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்காக சட்டப்பேரவை கூட்டம் கடந்த 20ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பல்வேறு துறைகளின் கீழ் புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வரும் நிலையில், இன்று நடைபெற்ற பள்ளிக் கல்வித்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் 25 புதிய அறிவிப்புகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.

பள்ளிக்கல்வித்துறை 25 புதிய அறிவிப்புகள்:

1. அரசுப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களை ரூ.58 கோடி மதிப்பில் தரம் உயர்த்துதல்.

2. பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் வைர விழா. தேசிய அளவிலான முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு வைர விழா ரூ.10 கோடி மதிப்பீட்டில் நடத்தப்படும்.

3. காலநிலை மாற்றம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கல்வி, ரூ.2.32 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

4. ஆளுமைத் திறன் மேம்பாட்டுச் செயல்பாடுகள் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குப் பயிற்சிகள் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

5. ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு அடிப்படை கணினி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு திறன் கற்றுக் கொடுக்கப்படும்.

6. அரசு உதவி பெறும் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் ரூ.42 கோடி செலவில் அமைக்கப்படும்.

7. ரோபோடிக் (ROBOTICS) ஆய்வகங்கள் மாவட்டத்திற்கு ஒரு பள்ளி என்ற அளவில் 38 பள்ளிகளில் ரூ.15.43 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.

8. பல்வகை திறன் பூங்கா, ஒரு மாவட்டத்திற்கு ஒரு பல்வகை திறன் பூங்கா என ரூ.3.80 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.

9. ஒன்பது முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள் எந்தவித இடர்பாடும் இன்றி தொடர்ந்து பள்ளிக்கு வரும்பொருட்டு உடல்ரீதியாகவும், மனரீதியாகவும், சமூக ரீதியாகவும் ஏற்படும் இடையூறுகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவும், இணையதள பயன்பாடுகளைப் பாதுகாப்பாகக் கையாள்வது குறித்து வழிகாட்டுதல் வழங்க, 'அகல் விளக்கு' என்ற பெயரில் ஆசிரியைகளைக் கொண்ட குழுக்கள் அமைக்கப்படும். இந்த திட்டம் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

10. 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் தொடக்கப் பள்ளிகளுக்கும் கலைத் திருவிழா விரிவாக்கம் செய்யப்படும்.
11. உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விச் செலவினை ஏற்றல், இதற்கு 6 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

12. தமிழ்நாடு தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பவியல் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்.

13. மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தைத் தகை சால் நிறுவனமாகத் தரம் உயர்த்துதல், 41.63 கோடி மதிப்பில் உயர்த்தப்படும்.

14. ஆசிரியர்களுக்கு திறன் வளர்ப் பயிற்சி, 3.15 கோடி செலவில் அளிக்கப்படும்.

15. முதற்கட்டமாக ஆயிரம் ஆசிரியர்களுக்கு தொல்லியல் பயிற்சி வழங்கப்பட்டது. இந்த ஆண்டு இரண்டாம் கட்டமாக, ஆயிரம் ஆசிரியர்களுக்கு மூன்று கோடி மதிப்பில் தொல்லியல் பயிற்சி வழங்கப்படும்.

16. உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க மாணவர்களுக்கான நன்னெறி செயல்பாடுகள், 2 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும்.

17. தூத்துக்குடியில் மாவட்ட மைய நூலகத்திற்கு புதிய கட்டிடம் ரூ.6 கோடி செலவில் கட்டப்படும்.

18. பார்வைத் திறன் குறைபாடுடைய மாணவர்களுக்கான கணினி எழுத்துணறி மென்பொருள், மாவட்ட மைய நூலகங்களில் ரூ.1.75 கோடி செலவில் உருவாக்கப்படும்.

19. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சிறார் அறிவியல் பூங்கா, ரூ.80.24 லட்சம் மதிப்பில் செயல்படுத்தப்படும்.
20. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியுடன் நூலகங்களுக்கான புதிய சேவைகள், 5 லட்சம் மதிப்பில் வழங்கப்படும்.

21. ஒவ்வொரு மாவட்டத்திலும் வீடுதோறும் நூலகங்கள் அமைத்துச் சிறப்பாகப் பயன்படுத்திவரும் தீவிர வாசகர்களைக் கண்டறிந்து ஊக்குவிக்கச் சொந்த நூலகங்களுக்கு ரூ.1.14 லட்சம் மதிப்பில் விருது வழங்கப்படும்.

22. தமிழ் இலக்கியம் தமிழ்நாட்டின் வரலாறு மற்றும் பண்பாட்டைப் பிற இந்திய மொழிகள் மற்றும் வெளிநாட்டு மொழிகளுக்கு விரிவுபடுத்த இரண்டு கோடி மதிப்பில் 'திசைதோறும் திராவிடம்' திட்டம் விரிவாக்கப்படும்.

23. மிளிரும் தமிழ்நாடு என்ற பெயரில் தமிழ்நாட்டுப் பண்பாடு, கட்டடக்கலை, சிற்பக்கலை, நாட்டுப்புறக் கலைகள், தனித்துவமான உணவு வகைகள், புவிசார் குறியீடுகள் உள்ளிட்டவை அடங்கிய புகைப்பட ஓவிய நூல்கள் 50 லட்சம் மதிப்பீட்டில் பரிசு பதிப்புகளாக வெளியிடப்படும்.

24. பட்டய கணக்காளர் ( CA) தேர்வு நூல்கள், 30 லட்சம் மதிப்பில் வெளியிடப்படும்.

25. பாடநூல் கழக நூல்களின் விற்பனையை இணையவழியில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் 20 லட்சம் மதிப்பில் விரிவுபடுத்தப்படும் என்பன உள்ளிட்ட பள்ளிக்கல்வித் துறையின் புதிய அறிவிப்புகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியாகியிட்டார்.

இதையும் படிங்க:சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்! - Tamil Nadu assembly

ABOUT THE AUTHOR

...view details