சென்னை:ஆங்கிலேயர்கள் வருகைக்குப் பின்பு தற்போது சென்னை புனித ஜார்ஜ் கோட்டை அமைந்துள்ள இடத்தின் ஒரு பகுதியை சென்னப்ப நாயக்கரிடம் இருந்து 1639ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி வாங்கியது. இந்த இடத்தை வாங்கிய அந்த நாளை தான் தற்போது ஒவ்வொரு ஆண்டும் சென்னை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறோம். அந்த வகையில், இன்று 385வது சென்னை தினம் கொண்டாடப்படுகிறது. சென்னையின் பழமையான முக்கிய அடையாளங்களில் முதன்மையான சென்னை மெரினா கடற்கரை குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
எழில் நிறைந்த கடற்கரை:ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன்பாகவே சென்னை கடற்கரை, தென்னை மரத் தோப்புகளால் சூழ்ந்து அழகிய எழில் கொஞ்சும் இடமாக திகழ்ந்துள்ளது. இந்த நிலையில், கடந்த 1879ஆம் ஆண்டு சென்னை வந்த ஆங்கிலேயர் சர் மவுண்ட்ஸ்டுவர்ட் எல்பின்ஸ்டோன் கிராண்ட் டஃப், சென்னையின் அழகிய கடற்கரையை பார்த்து வியந்து, அதனை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்த வேண்டும் என சீரமைக்க நடவடிக்கை மேற்கொண்டு உள்ளார்.
மெரினா பெயர்சூட்டல்: அதன் பிறகு, சென்னை நேப்பியர் பாலம் முதல் சாந்தோம் வரை கடற்கரைகளில் சாலைகள் அமைத்து அழகுபடுத்தி, கடந்த 1884ஆம் ஆண்டு சென்னை கடற்கரைக்கு மெரினா கடற்கரை என பெயர் சூட்டி உள்ளார். மேலும், அந்தக் கடற்கரை பகுதிகளை பார்க்கும்போது அழகான பழைய இத்தாலிய நகரமான சிசிலியன் நகர் பகுதி அவரின் நினைவுக்கு வருவதால் இந்த பெயர் சூட்டியதாக பின்னாளில் அவர் வெளியிட்ட புத்தகத்தில் தெரிவித்திருந்தார்.
பொதுக்கூட்டங்களுக்கான திடல்:அதன் பிறகு, மெரினா கடற்கரை வரலாற்றில் ஒரு முக்கிய இடமாக மாறியது. அதன் பிறகு சுதந்திரப் போராட்டத்தின் போது ப்காந்தி, சுப்பிரமணிய பாரதியார், சுபாஷ் சந்திர போஸ், லாலா லஜபதிராய், பால கங்காதர திலகர் ஆகியோர் மெரினா கடற்கரையில் பொதுக்கூட்டங்கள் நடத்தி மக்களிடையே உரை நிகழ்த்தியுள்ளனர். இந்த பொதுக்கூட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் மெரினா கடற்கரையில் திரண்டதாக வரலாறுகள் கூறுகிறது.
வரலாற்றுமிக்க தலைவர்கள் இங்கு பொதுக்கூட்டம் நடத்தியதால் மெரினா கடற்கரைக்கு திலகர் கடற்கரை என சுப்பிரமணிய பாரதியார் பெயர் சூட்டினார். இதற்குச் சான்றாக சென்னை மெரினா கடற்கரையில் திலகர் திடல் என்ற கல்வெட்டு மட்டும் இன்றும் அப்படியே உள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு மெரினா கடற்கரை பல்வேறு பரிணாமங்களைப் பெற்றது. முழுக்க முழுக்க பொது மக்களின் சுற்றுலாத்தலமாகவே மாறிவிட்டது.
சிறப்புமிக்க சிலைகள்:இதையடுத்து கடற்கரையில் பல்வேறு வரலாற்றுச் சிலைகள், சின்னங்கள் அமைக்கப்பட்டன. அதில் முதலாவதாக 1950ஆம் ஆண்டு காலகட்டத்தில் காந்தி சிலை, அதன் பிறகு உழைப்பாளர்களைப் போற்றும் வகையில் உழைப்பாளர்கள் சிலை அமைக்கப்பட்டது. பின், தமிழ் மொழியைப் பறைசாற்றும் வகையில் திருவள்ளுவர், கம்பர், பெரியார், ஔவையார், பாரதியார், பாரதிதாசன், கண்ணகி சிலைகள் உட்பட ஆங்கிலேயர்களான கால்டுவெல், ஜி.யு.போப் உள்ளிட்டோரின் 17 சிலைகள் மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ளன.
சீரணி அரங்கம்: முதன் முதலில் இங்கிலாந்து இளவரசி விக்டோரியாவின் சிலை தான் 1887ஆம் ஆண்டு சென்னை மெரினாவில் நிறுவப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அந்த சிலை தற்போது சென்னை பல்கலைக்கழக வளாகப் பகுதியில் உள்ளது. பிறகு சி.என்.அண்ணாதுரை முதலமைச்சராக இருந்த காலத்தில், சென்னை மெரினா கடற்கரையில் சீரணி அரங்கம் கட்டப்பட்டு பல்வேறு கட்சி பொதுக் கூட்டங்கள் அதில் நடத்தப்பட்டன.
மெட்ராஸ் லைட் ஹவுஸ்: பிறகு கடந்த 2003ஆம் ஆண்டு மெரினா கடற்கரையில் பாழடைந்து இருந்த சீரணி அரங்கம் முற்றிலுமாக இடித்து அகற்றப்பட்டது. மேலும், சென்னை மெரினா கடற்கரையில் 1976ஆம் ஆண்டு கலங்கரை விளக்கம் அப்போதைய ஆட்சியாளர்களால் கட்டப்பட்டது. தற்போது சென்னை மெரினா கடற்கரையில் கலங்கரை விளக்கமும், மெட்ராஸ் லைட் ஹவுஸ் என அழைக்கப்பட்டு, முக்கிய சுற்றுலாத்தலமாக திகழ்ந்து வருகிறது.
அண்ணா சதுக்கம்:இந்த நிலையில், 1968ஆம் ஆண்டு அப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக இருந்த அண்ணாதுரை இறந்த பிறகு, மெரினா கடற்கரையில் அவருக்கு முதன் முதலில் சமாதி கட்டப்பட்டு, அதற்கு அண்ணா சதுக்கம் என பெயர் சூட்டப்பட்டு அதுவும் சுற்றுலாத்தலமாக மாற்றப்பட்டது. அதன் பிறகு முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ராமச்சந்திரனுக்கு அண்ணாவின் சமாதிக்கு பின்புறம் சமாதி கட்டப்பட்டது.