தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"இந்தி திணிப்பு என்பது திட்டமிட்ட அரசியல் நடவடிக்கை".. விசிக தலைவர் திருமாவளவன் விமர்சனம்! - VCK LEADER THIRUMAVALAVAN

இந்தி திணிப்பு என்பது திட்டமிட்ட அரசியல் நடவடிக்கை; பிராந்திய மொழியான இந்தியை மற்ற மாநில மக்கள் மீது திணிக்க முயற்சிப்பதை ஏற்க முடியாது என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு
விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு (Etv Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 25, 2025, 5:35 PM IST

சென்னை:இந்தியாவில் இந்தி ஒரு சில மாநிலங்களில்தான் பேசப்படுகிறது. அனைத்து மாநிலங்களிலும் இந்தியை தேசிய, அலுவல் மொழியாக மாற்ற வேண்டும் என்பது இந்தி பேசக்கூடியவர்களின் செயல் திட்டமாக உள்ளது என விசிக தலைவர் திருமாவளவன் விமர்சனம் செய்துள்ளார்.

செயல் திட்டம்:வியாட்நாமில் நடைபெற்ற உலக தமிழர் மாநாட்டில் பங்கேற்றுவிட்டு இன்று சென்னை திரும்பிய திருமாவளவன், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறும்போது, "வியாட்நாமில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் ஆட்சி செய்தார்கள் என்பதை அறிஞர்கள் கூறினர். வரலாற்று தலத்தை காணக்கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

இந்தி பேசாத மாநில மக்களிடம் இந்தி திணிப்பு என்பது திட்டமிட்ட அரசியல் நடவடிக்கையாகும். இந்தியாவை முழுமையாக ஒரே நாடு ஒரே மொழி எனும் அடிப்படையில் மாற்ற வேண்டும் என்ற முயற்சி நீண்டகாலமாக நடந்து வருகிறது. இந்தி ஒரு சில மாநிலங்களில் தான் பேசப்படுகிறது. இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் இந்தியை தேசிய, அலுவல் மொழியாக மாற்ற வேண்டும் என்பது இந்தி பேசக்கூடியவர்களின் செயல் திட்டமாக இருக்கிறது.

இந்தியும் ஒரு பிராந்திய மொழி தான். தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளை பிராந்திய மொழி என சொல்கிறார்கள். இந்தி ஒரு பிராந்திய மொழி என்பதை மறுந்துவிட்டு பேசுகின்றனர். பிற மொழி பேசர்கூடிய மக்கள் மீது இந்தியை திணிப்பது அரசியலமைப்பு சட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும் எதிரானது. மும்மொழி கொள்கையில் இந்தி கட்டாயம் இல்லை என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் இப்போது விளக்கம் சொல்லி இருக்கிறார்.

வடமாநிலங்களில் 3ஆவது மொழி எது?:ஆனால் நடைமுறையில் மத்திய அரசு நடத்துகிற கல்வி நிறுவனங்களில் 3வது மொழியாக இந்தி தான் கற்றுத் தரப்படுகிறது. மாநில அரசு நடத்துகின்ற கல்வி நிறுவனங்களில் 3வது மொழியாக இந்தியை கொண்டு வர வேண்டும். எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் மத்திய ஆட்சியாளர்களுக்கு உள்ளது. பிஎம் ஸ்ரீ என்ற பெயரில் பள்ளிக்கூடங்களை நிறுவுகின்றனர். அந்த பள்ளி கூடங்களில் தாய்மொழி, ஆங்கிலம், 3ஆவதாக ஏதேனும் ஒரு இந்திய மொழி என்று கூறுகின்றனர்.

இந்தி பேசக்கூடியவர்கள் 3ஆவது மொழியாக எந்த மொழியை பேசுகின்றனர் என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் இந்தி, ஆங்கிலம் என 2 மொழியை தான் கற்கிறார்கள். அதே நேரத்தில் இந்தியாவில் உள்ள பிற மொழி பேசக்கூடியவர்கள் தாய்மொழி, ஆங்கிலம் ஆகியவற்றுடன் இந்தியையும் கட்டாயமாக கற்க வேண்டும் என்ற முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

இதையும் படிங்க:மக்களவை தொகுதி மறுசீரமைப்பு குறித்து மார்ச் 5ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டம்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

ஒரே தேசம் ஒரே கலாச்சாரம் என்பது போல் ஒரே தேசம் ஒரே மொழி என்ற நிலையை உருவாக்க பா.ஜ.க. அரசு நினைக்கிறது. ஏதேனும் ஒரு இந்திய மொழி மட்டும் அல்ல அயல் நாட்டு மொழியை கற்க கூட நமக்கு உரிமை இருக்கிறது. தமிழ்நாட்டில் பிரஞ்சு மொழியை கூட கற்று கொள்கிறார்கள். அது தனி நபரின் விருப்பம். ஆனால் தேசிய கல்விக் கொள்கையில் ஒரு நிலைப்பாட்டை வைத்து பிற மொழி பேசக்கூடிய மக்கள் மீது இந்தியை திணித்து 10 ஆண்டுகளுக்குப் பின் பிற மொழி பேசக்கூடிய மக்களையும் இந்திவாலாக்களாக மாற்றக்கூடிய நோக்கத்தை இது கொண்டிருக்கிறது. இதை தான் நாங்கள் எதிர்க்கிறோம்.

காங்கிரஸ் கட்சியும் இந்தியை திணித்தது:ஆனால் மத்திய அரசு பிடிவாதத்தில் இருந்து இறங்கவில்லை. மாறவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை இந்திக்கு அல்ல; இந்தி திணிப்புக்கு ஒரு போதும் இடம் இருக்காது. இந்தியா கூட்டணியில் உள்ள தலைவர்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். கூட்டணியில் இருப்பதாலேயே கருத்துக்கு இணங்கி போக வேண்டும், மொழி கொள்கையில் இணங்கி போக வேண்டும் என்பதல்ல. இந்தியா கூட்டணியில் இருந்து கொண்டே தான் திமுக உள்பட கூட்டணி கட்சிகள் இந்தி திணிப்பு கூடாது என வலியுறுத்துகிறோம். பா.ஜ.க மட்டுமல்ல. இதற்கு முன்பு காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இந்தி திணிப்பு நடந்து இருக்கிறது.

அப்போதும் எதிர்த்து இருக்கிறோம். மீண்டும் காங்கிரஸ் வந்து இந்தியை திணித்தால் அப்போதும் எதிர்ப்போம். அந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருப்போம். தமிழ்நாட்டில் மட்டும் அல்ல. இந்தி அல்லாத பிற மொழி பேசக்கூடிய மக்கள் மீது ஏன் இந்தியைத் திணிக்க வேண்டும்?

பல வேடம் போடும் அண்ணாமலை: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பல விஷயங்களில் விதாண்டவாதம் பேசுகிறார். அவரது அரசியலை நிலை நாட்ட வேண்டும் என்று விரும்புகிறார். கர்நாடகாவில் இருந்தால் கன்னடன் என்பார். தமிழ் நாட்டில் இருந்தால் தமிழன் என்பார். ஆர்.எஸ்.எஸ். கூடத்திற்கு சென்றால் இந்து என்பார். பல வேடம் போடக்கூடியவர் அண்ணாமலை. அண்ணாமலை பேச்சுக்கு தமிழ் நாட்டில் யாரும் முக்கியத்துவம் தரமாட்டார்கள்,"என்று திருமாவளவன் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details