திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், நத்தம் குட்டுப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கரந்த மலை பகுதியில் பெரிய மலையூர், சின்ன மலையூர், பள்ளத்துக்காடு, வலசை என 4 மலைக் கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 400க்கும் மேற்பட்ட குடும்பங்களில், 5,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். 100 ஆண்டுகளுக்கும் மேலாக இதே பகுதியில் வசித்து வரும் இவர்கள், தரை மட்டத்திலிருந்து 9 கி.மீ தூரத்தில் உள்ள இந்த கிராமங்களுக்கு சாலை வசதி, மருத்துவ வசதி மற்றும் பட்டாக்கள் வழங்க இதுவரை அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும், அடிப்படை வசதிகள் கோரி நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்தும் இது குறித்து அரசு கண்டுகொள்ளவில்லை எனக் கூறி, உடனடியாக சாலை வசதி, மருத்துவ வசதி மற்றும் பட்டாக்கள் வழங்கக் கோரி பெரிய மலையூர் கிராமத்தைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் என அனைவரும் ஒன்றிணைந்து, திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தேசிய நெடுஞ்சாலையில் சேர் வீடு பிரிவு அருகே சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் பிரதான சாலையான இந்த சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும், இந்த வழியே செல்லும் அரசுப் பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்கள் அனைத்தும் போக்குவரத்து நெரிசலில் சிக்கின.
அதனைத் தொடர்ந்து, சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் திண்டுக்கல் ரூரல் துணை காவல் கண்காணிப்பாளர் உதயகுமார், நத்தம் தாசில்தார் உள்ளிட்ட போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.