நிறைவடையாமல் உள்ள அரியலூர்-கடலூர் மேம்பால காட்சி (credits - ETV Bharat Tamil Nadu) அரியலூர்:அரியலூர் - கடலூர் மாவட்டத்தை இணைக்க மேம்பாலம் அமைக்க இடம் அளிக்காததாக, இந்தியா சிமெண்ட் நிறுவனத்தை எதிர்த்து விரைவில் பல கட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியம் அருகே உள்ள கோட்டை காடு கிராமத்தில், வெள்ளாற்றின் குறுக்கே அரியலூர் மாவட்டத்தையும், கடலூர் மாவட்டத்தையும் இணைக்கும் வகையில் மேம்பாலம் கட்டப்படும் என கடந்த 2013ஆம் ஆண்டு அரசால் அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு, பல்வேறு போராட்டங்களுக்கு இடையே மேம்பாலம் பணிகள் துவங்கப்பட்டது.
இதனையடுத்து, அணுகு சாலை அமைப்பதற்காக ரூ.5.25 கோடி ஒதுக்கப்பட்டது. இன்று வரை 20 சதவீத பணிகள் மட்டும் முடிக்கப்பட்டுள்ளது. மேம்பாலப் பணிகள் முழுவதுமாக முடிக்கப்படாததால், மழைக்காலங்களில் பொதுமக்கள் சுமார் 16 கிலோமீட்டர் சுற்றி கடலூர் மாவட்டத்திற்குச் செல்ல வேண்டி நிலை உள்ளது. இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் மேம்பாலப் பணிகள் முடிவடையாமல் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இது குறித்து கட்டப்படாமல் உள்ள மேம்பாலத்தின் கீழ் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், “இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் இடம் அளிக்காத காரணத்தினால் மேம்பாலப் பணிகளை தொடர முடியவில்லை. பொதுமக்கள் நலன் கருதி இந்தியா சிமெண்ட் நிறுவனம் இடத்தை அளிக்காவிட்டால், விரைவில் பல கட்ட போராட்டங்கள் நடைபெறும்” என்று அறிவித்தனர்.
இதனையடுத்து, அரியலூர் - கடலூர் இடையே வெள்ளாற்றின் குறுக்கே, அரசால் அறிவிக்கப்பட்ட மேம்பால கட்டுமானப் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என இருமாவட்ட மக்களும் வலியுறுத்துகின்றனர்.
இக்கூட்டத்தில், பாமக முன்னாள் கடலூர் மாவட்டச் செயலாளர், நல்லூர் ஊராட்சி ஒன்றியத் தலைவர் ஆடிய பாதம், முன்னாள் மாநில துணைச் செயலாளர் திருஞானம், ஆண்டிமடம் வடக்கு ஒன்றியச் செயலாளர் புக்குழி இராமச்சந்திரன், உலக திருக்குறள் கூட்டமைப்பு தலைவர் ஞான மூர்த்தி உள்ளிட்ட பல்வேறு கட்சியினர், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:அண்ணனும், தம்பியும் சேரக்கூடாதா? 2026 தேர்தல் கூட்டணிக்கு வெயிட்டிங்.. சீமான் அதிரடி பதில்! - Seeman About Vijay