மதுரை:அரசு ராஜாஜி மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த உத்தரவிடக் கோரி, மதுரை வெரோணிக்கா மேரி உயர் நீதிமன்ற மதுரை அமரவில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், "மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை தென் மாவட்ட மக்களின் மருத்துவத் தேவைகளை பூர்த்தி செய்யும் இடமாக உள்ளது. தென் மாவட்டத்தில் கல்லீரல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வந்த நிலையில், வழக்கொன்றின் அடிப்படையில் 3 ஆண்டுகளுக்குள்ளாக தமிழகத்தின் அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கல்லீரல் மாற்று சிகிச்சைக்கான நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், 7 ஆண்டுகளாகியும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படவில்லை. தமிழகத்தில் மது அருந்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ள நிலையில் கல்லீரல் பாதிப்பும் அதிகரித்து வருகிறது.
இது தொடர்பாக நடவடிக்கை கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.