மதுரை: திண்டுக்கல் மாவட்டம் பழனி, சக்தி சங்கமம் சார்பில் ஸ்ரீதர் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "நான் சக்தி சங்கமம் என்ற அமைப்பின் உறுப்பினராக உள்ளேன். நாங்கள் ஒவ்வொரு வருடமும் விநாயகர் சதுர்த்தி திருவிழாவினை நடத்தி வருகிறோம்.
அந்த வகையில், ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சிலை ஊர்வலமானது பழனி அடிவாரம் பாதவிநாயகர் திருக்கோயிலில் சம்பர்தாய முறைப்படி பூஜைகள் முடித்து விட்டு அங்கிருந்து விநாயகர் சிலை ஊர்வலமான தொடங்கி, கிரிவலப் பாதை வழியாக சுற்றி இறுதியில் சண்முகா நதியில் விநாயகர் சிலைகளை கரைப்பது வழக்கம்.
எனவே வழக்கம்போல இந்த ஆண்டும் விநாயகர் சிலை ஊர்வலத்தை வருகிற 13ஆம் தேதி முதல் அதற்கு மறுநாள் 14ஆம் தேதி வரை பழனி அடிவாரம் பாதவிநாயகர் திருக்கோயிலில் தொடங்கி கிரிவலப் பாதை வழியாக சென்று சண்முகா நதியில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு அனுமதி அளித்து, அதற்கான உரிய காவல்துறை பாதுகாப்பையும் வழங்க உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கோரியிருந்தார்.