கன்னியாகுமரி: நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்கிறது. அதற்காக தமிழ்நாடு முழுவதும், தேசிய கட்சித் தலைவர்கள் அனைவரும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நந்தினி ஆகியோருக்கு ஆதரவாகத் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சித் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டோர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். இதற்காக அவர் திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள ஹெலிபேடு தளத்தில் வந்து இறங்கினார்.
பின்னர், அங்கிருந்து கார் மூலம் தக்கலைப் பகுதிக்கு சென்றுள்ளார். அதைத் தொடர்ந்து தக்கலை மேட்டுக்கடை பகுதியில் இருந்து திருவனந்தபுரம் சாலையில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெறும் வாகன பேரணியில் (Road show) அமித்ஷா கலந்து கொண்டு, திறந்த வெளி வாகனத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளார். இந்த வாகன பேரணியின் இறுதியில் பழைய பேருந்து நிலையம் அருகில், தேர்தல் வேட்பாளர்களை ஆதரித்து உரையாற்றுகிறார்.
தற்போது, மத்திய அமைச்சர் அமித்ஷா குமரி மாவட்டத்திற்குப் பிரச்சாரம் மேற்கொள்ள வருவதை முன்னிட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் அமித்ஷா வந்து இறங்கும் ஹெலிபேடு தளம், அவர் காரில் செல்லும் வழி தடங்கள் மற்றும் வாகனப் பேரணி நடைபெறும் பகுதிகள் ஆகியவற்றில் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, வாகனப் பேரணி நடைபெறும் சாலையில் உள்ள கட்டடங்கள், வீடுகள், மொட்டை மாடிகள் போன்ற பகுதிகளில் போலீசார் நிறுத்தப்பட்டு, தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். நாகர்கோவில் திருவனந்தபுரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தோசை, இட்லி இருக்கட்டும் தமிழைப் பிடிக்குமா? தமிழர்களுக்கு என்ன செய்தீர்கள்? - ராகுல் காந்தி சரமாரி கேள்வி - Lok Sabha Election 2024