கனமழை காரணமாக தரைப்பாலம் மூழ்கிய காட்சி (Credit: ETV Bharat Tamilnadu) கோயம்புத்தூர்: தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறைந்து கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வரும் நிலையில், கோவை மாவட்டத்திலும் நாளொன்றுக்கு சுமார் 1 மணி நேரத்திலிருந்து 2 மணி நேரம் வரை மிதமான மழையும், ஒரு சில இடங்களில் சாரம் மழையும் பெய்து வருகிறது.
வானிலை ஆய்வு மையமும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் தொடர் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில், கோவை புறநகர பகுதிகளான அன்னூர், எல்லப்பாளையம், குப்பேபாளையம், சர்க்கார் சாமக்குளம் உள்ளிட்ட இடங்களில் இன்று (மே 20) பிற்பகல் 3 மணி அளவில் கனமழை பெய்தது.
சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த இந்த கனமழையால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். குறிப்பாக குப்பேபாளையம் பகுதியில் கெளசிகா நதியின் குறுக்கே உள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கியதால் எல்லப்பாளையம் - பெரியநாயக்கன்பாளையம் செல்லும் சாலையில் போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து கனமழை பெய்வதற்கான சாத்திய கூறுகள் உள்ளதால் வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து பாதுகாப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக மேட்டுப்பாளையம் பகுதியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் முகாமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:யார் இந்த இப்ராஹிம் ரைசி? - அரசியல் வாழ்க்கையும் சர்ச்சைகளும்..! - Ebrahim Raisi Latest News