சென்னை:கிண்டியில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில், கடந்த 18 மாதம் காலத்தில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட அறுவை சிகிச்சைகளை செய்து சாதனை படைத்துள்ளது. இந்த நிலையில், மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து நலம் விசாரித்தார்.
தென்சென்னைப் பகுதியில் உயர்சிறப்பு மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று சென்னை கிண்டில் கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துமனை அமைக்கப்பட்டது. அதிநவீன வசதிகளுடன் கூடிய அறுவை அரங்குள் இந்த மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையை 2023 ஜூன் 15ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை சாதனை:
அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்ட காட்சி (ETV Bharat Tamil Nadu) அதனைத் தொடர்ந்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இம்மருத்துவமனை தொடங்கப்பட்ட குறுகிய காலங்களில் (18 மாதங்கள்) 5,020 அறுவை சிகிச்சைகளும், 538 நரம்பியல் அறுவை சிகிச்சைகள், 1,375 சிறுநீரக அறுவை சிகிச்சைகள், 512 பொது அறுவை சிகிச்சைகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட புற்றுநோய் அறுவை சிகிச்சைகள் மற்றும் 137 இருதய பைபாஸ் மற்றும் இதய வால்வு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை: எப்போது பயன்பாட்டுக்கு வரும்? - ஆர்டிஐ வெளியிட்ட தகவல்!
மேலும், கடந்த 10 மாதத்தில் இருதயவியல் துறையில் 1,683 பேருக்கு ஆஞ்சியோகிராம், ஸ்டென்ட் மற்றும் பேஸ்மேக்கர் பொருத்தும் சிகிச்சைகள் நடைபெற்று சாதனை படைத்துள்ளது. இந்த நிலையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (டிச.12) மருத்துவமனைக்குச் சென்று அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து நலம் விசாரித்தார்.
பின்னர், இந்த மருத்துவமனை குறுகிய காலத்தில் சிறப்புடன் செயல்படுவதற்கு காரணமாக உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த களப்பணியாளர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார். அரசு மருத்துவமனை துவக்கப்பட்ட குறுகிய காலத்தில் அதிகளவில் அறுவை சிகிச்சையை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.