சென்னை:கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை ஓர் ஆண்டு நிறைவில் பல்லாயிரம் உயிர்களைக் காப்பாற்றி சாதனை படைத்துள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
அதில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் கடந்த ஆண்டு ஜூன் 15 அன்று முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டில் சென்னை, கிண்டி கிங் நோய்தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 240.54 கோடி ரூபாயில் கட்டிடம் மற்றும் 146.52 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதிநவீன உபகரண வசதியுடன் 6 இலட்சம் சதுர அடியில் தரை மற்றும் ஆறு தளங்களுடன் 1000 படுக்கை வசதிகளுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை ஓர் ஆண்டு நிறைவில் பல்லாயிரம் உயிர்களை காப்பாற்றி சாதனை படைத்துள்ளது.
உயர்சிறப்பு மருத்துவத்துறைகள்:இம்மருத்துவமனையில் இருதயவியல் மருத்துவத் துறை, இருதயம் மற்றும் நுரையீரல் அறுவை சிகிச்சைத்துறை. நரம்பியல் மருத்துவத் துறை, நரம்பியல் அறுவை சிகிச்சை, புற்று நோய் மருத்துவப்பிரிவு, புற்று நோய் அறுவை சிகிச்சைப்பிரிவு, இரைப்பை குடல் நோய் மருத்துவம், இரைப்பை குடல் நோய் அறுவைச்சிகிச்சைத்துறை, சிறுநீரக மருத்துவம், சிறுநீரக அறுவை சிகிச்சை, இரத்தநாள அறுவை சிகிச்சை, நுண்துளை மூளை இரத்தநாள கதிரியல் பிரிவு ஆகிய துறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் இம்மருத்துவமனையில் சிறப்பு மருத்துவத்துறை பிரிவுகளாக அவசர சிகிச்சை, மயக்கவியல் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு, மைய ஆய்வகம், இரத்த வங்கி, கதிரியிக்கவியர் பிரிவு(CT.MRI. ULTRASOUND SCAN DIGITAL XRAY), இயன் முறை மருத்துவம் மற்றும் மறுவாழ்வு போன்ற பிரிவுகள் உள்ளன. மேலும், இருதய கேத்லேப், மூளை இரத்தநாள கேத்லேப், அதிதீவிர சிகிச்சை பிரிவு, 15 உயர்சிறப்பு அறுவை அரங்குகள் போன்ற மருத்துவ வசதிகள் உள்ளன.
பயன்பெற்ற நோயாளிகளின் எண்ணிக்கை: இந்த மருத்துவமனை ஆரம்பிக்கப்பட்ட ஓர் ஆண்டு முடிவில் புறநோயாளிகளாக 2 இலட்சத்து 21 ஆயிரத்து 434 பேரும், உள்நோயாளிகளாக 63 ஆயிரத்து 505 பேரும் சிகிச்சை பெற்றுள்ளனர். இதுவரை 2 ஆயிரத்து 179 அறுவை சிகிச்சைகள், 521 ஆஞ்கியோகிராம், 6 ஆயிரத்து 968 டயாலிசிஸ், 7 இலசத்து 72 ஆயிரத்து 558 ஆய்வக பரிசோதனைகள், 7 ஆயிரத்து 247 சிடி ஸ்கேன்கள், 2 ஆயிரத்து 4 எண்டோஸ்கோப்பி, 10 ஆயிரத்து 168 எக்ஸ்ரே, 17 ஆயிரத்து 349 எக்கோ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி, பல்வேறு உபகரணங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அவை அதிநவீன 1.5 டெஸ்லா ஆட்டோ MRI- Double Baloon Endoscopy ஆகிய வசதிகள் துவங்கப்பட்டு மருத்துவச் சேவை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி 4ஆம் தேதி 6.74 கோடி ரூபாய் செலவில் அதிநவீன இருதய கேத்லேப் ஆய்வகம் தொடங்கி வைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளது.