சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை சைதாப்பேட்டை பஜார் சாலையில் 79 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய பள்ளிக் கட்டுமானத்திற்கான பணிகளை பூமி பூஐையுடன் துவக்கி வைத்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “சைதாப்பேட்டையில் மக்கள் நலத்திட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.மக்களின் அடிப்படைத் தேவைகளான கல்வி, மருத்துவம் ஆகியவற்றிற்கான புதிய கட்டமைப்புகளை தமிழகம் முழுவதும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. சைதாப்பேட்டையில் உள்ள சென்னை துவக்கப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. புதிய வகுப்பறைகள், வாகனம் நிறுத்தும் இடம், கழிவறை, சத்துணவுக்கூடம் போன்ற பல்வேறு வசதிகள் 5 ஆயிரத்து 400 சதுர அடி பரப்பில் கட்டப்பட்டுள்ளது” என்று கூறினார்.
திமுக முக்கால் நூற்றாண்டை கடந்துவிட்டது: திராவிட மாடல் என மக்களை ஏமாற்றுவதாக திமுக குறித்து விஜய் கடுமையாக விமர்சித்தது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், “திமுகவில் உள்ளவர்களும் திமுகவை பற்றி அறிந்தவர்கள். ஆனாலும் திமுகவின் தேவை ஒரு முக்கால் நூற்றாண்டை கடந்து தமிழ்நாட்டுக்கு எத்தகைய வகையில் பணியாற்றிக் கொண்டுள்ளது என்பதை நன்றாக உணர்ந்து கொண்டுதான் இருக்கின்றனர்.