சென்னை: கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைகழகத்தில் நடைபெற்ற தேசிய ஆயுர்வேத தின நிகழ்ச்சியில் பங்கேற்ற மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாநாட்டு கட்டுரை மலரை வெளியிட்டார்.
எதிர்கால மருத்துவம் மாநாடு:அப்போது அவர் பேசுகையில், "எதிர்காலத்தில் பாரம்பரிய மருத்துவ முறைகள் பயன்பாட்டுக்கு எடுத்துக்காட்டாக இந்த மாநாடு அமையும். உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள், வல்லுநர்கள் கலந்துகொண்ட எதிர்கால மருத்துவம் என்ற மாநாடு 3 நாட்கள் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்டுள்ளது. இந்திய மருத்துவத் துறையில் மிக முக்கியத்துவம் வாய்ந்த மாநாடாக அமைந்துள்ளது.
இந்திய மருத்துவத்தில் ஆயுர்வேத மருத்துவம் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. மத்திய அரசு இதற்கென ஒரு துறையையே வைத்துள்ளது. ஆயுஷ் - ஆயுர்வேதா (Ayush- Ayuverthaa), யோகா (yoga), யுனானி (Unani), சித்தா (Siddha), ஹோமியோபதி (Homeopathy) என்பதை ஒருங்கிணைத்து ஒரு துறையே உள்ளது. இதில் மத்திய அரசு சித்தா என்பதற்கு பதிலாக இமாசலப்பிரதேசம், சிக்கிம் பகுதிகளில் உள்ள செளரிக்பாய் என்ற மருத்துவத்தில் உள்ள 'எஸ்' என்பதை சேர்த்தது.
ஆயுஷ்:அதற்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்ததுடன், அதில் சித்தா இடம்பெற வேண்டும் என தெரிவித்தோம். அதனைத் தொடரந்து சித்தா என்பதுடன், செளரிக்பாய் மருத்துவத்தையும் சேர்த்து AYUSSH என வைத்துள்ளது. தமிழ்நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கு எந்த களங்கமும் வந்துவிடக்கூடாது என்ற நோக்கத்தில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைப்பதற்கு 25 ஏக்கர் நிலம் கையகப்படுத்தி வைத்துள்ளது. தமிழ்நாடு ஆளுநரின் அனுமதி கிடைத்த உடன் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்கப்படும்” என்று அகூறினார்.
தேசிய ஆயுர்வேதா தினம்:அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப்பல்கலைக்கழகத்தின் சார்பில் 9வது தேசிய ஆயுர்வேதா தினத்தை முன்னிட்டு, உலகளாவிய ஆயுர்வேத புதுமைகள் மற்றும் ஒருங்கிணைப்பு என்னும் தலைப்பில் சர்வதேச மாநாடு இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் இலங்கை மற்றும் துபாய் ஆகிய நாடுகளில் இருந்து 2 விரிவுரையாளர்கள் கலந்து கொண்டு பேச உள்ளார்கள்.
ரூ.3.5 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம்:இம்மாநாட்டில் பங்கேற்பதற்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் வந்திருக்கின்றனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா, ஹோமியோபதி போன்ற இந்திய மருத்துவத்துறைகள் தொடர்ந்து கடந்த மூன்றரை ஆண்டுகளாக தொடர்ந்து வளர்ச்சிகளை பெற்று வருகிறது. ஆயுர்வேதா மருத்துவத்துவத்தைப் பொறுத்தவரை அதற்கென்று மருத்துவக் கல்லூரி நாகர்கோவில் பகுதியில் உள்ள கோட்டார் பகுதியில் அமைந்துள்ளது.
அம்மருத்துவமனையில் 3.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கும், ரசசாஸ்திரம், திரவியகுணம் என்கின்ற இரண்டு பாடப்பிரிவுகளின் கீழ் தலா 5 இடங்களை உருவாக்குவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் ஆயுர்வேதா மருத்துவக்கல்லூரியின் வளர்ச்சிக்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இளஞ்சி மன்றங்கள்:மலைவாழ் பகுதி மக்கள் பெரும்பாலும் வசிக்கும் 12 பகுதிகளில் நடமாடும் சித்த மருந்தகம் தொடங்கி வைக்கப்பட்டது. அதில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பயன்பெற்றிருக்கிறார்கள். மேலும் 2023 பிப்ரவரியில் அரசுப் பள்ளிகளில் இளஞ்சி மன்றம் தொடங்கப்பட்டது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மூலிகைகள் பற்றிய முக்கியத்துவம் அறிந்து கொள்வதற்கு வசதியாக இளஞ்சி மன்றங்கள் தொடங்கப்பட்டது. மூலிகை பயிர் சாகுபடியைப் பொறுத்தவரை இந்த மருத்துவத்திற்கு மூலிகை பயிர் அவசியம்.
எனவே அந்த வகையில் மூலிகை பயிர் சாகுபடிக்கு திண்டுக்கல்லில் 200 ஏக்கர் தேர்ந்தெடுத்து மூலிகை பயிர் சாகுபடி தொடங்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. டாம்ப்கால் மருந்து பல்வேறு புதிய புதிய வகைகளில் மருந்து பொருட்கள் தொடர்ச்சியாக பயன்பாட்டில் வந்துக் கொண்டிருக்கிறது. இந்த மாநாடு என்பது நவீன ஆயுர்வேதம் மற்றும் பாரம்பரிய ஆயுர்வேதத்தின் ஒருங்கிணைப்பு ஆகும்.
எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம்:மேலும் இந்த மாநாட்டில் ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பிக்கும் பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஏறத்தாழ 150 ஆராய்ச்சி கட்டுரைகள் ஒருங்கிணைக்கப்பட்டு புத்தகமாக இன்று வெளியிடப்பட்டிருக்கிறது. மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஆர்ப்பாட்டம் அறிவித்ததற்கு எதிர்க்கட்சி தலைவருக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். மயிலாடுதுறை அரசு மருத்துவமனை என்பது அவர்களது ஆட்சிக் காலத்திலும் அங்கேயே தான் இருந்தது.
இந்த மருத்துவமனையில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் செய்திருக்கும் பணிகளை கூறுகிறேன். எதிர்க்கட்சித் தலைவர் ஆர்ப்பாட்டத்திற்கு யாரையோ அனுப்புவதற்கு பதிலாக இந்த மருத்துவமனைக்கு நேரிடையாக சென்று கடந்த 3 ஆண்டுகளில் என்னென்ன பணிகளை செய்திருக்கிறோம் என்பதை ஆய்வு செய்து தெரிந்துக் கொள்ளலாம்.