மதுரை:தமிழகத்தில் நடத்தப்படும் கிராம சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள், வரவு செலவு கணக்குகள் உள்ளிட்ட முழு நிகழ்வுகளையும் வீடியோ பதிவு செய்ய உத்தரவிட கோரி திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த நபர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில், மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். இதனை இன்று (ஏப்.15) விசாரித்த நீதிபதிகள், கிராம சபை கூட்டத்தை வீடியோ பதிவு செய்வது குறித்து தமிழக அரசு விரிவான பதில் அளிக்க வேண்டும் என கூறி உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த குருநாதன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “தமிழகத்தில் அனைத்து கிராமத்திலும் கிராம சபை கூட்டம் வருடம் தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கிராம சபைக் கூட்டத்தில் ஊராட்சிக்கு உட்பட்ட வரவு செலவு கணக்குகள் மற்றும் அடிப்படைத் தேவைகள், தீர்மானங்கள் மற்றும் கோரிக்கைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் கூட்டம் நடைபெறும்.
இதுபோன்று நடத்தப்படும் கிராம சபை கூட்டத்தை வீடியோ பதிவு செய்து அதனைப் பஞ்சாயத்து நிர்வாகம் இணையதளத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். ஆனால் இதுபோன்று எந்த ஒரு வீடியோ பதிவும் செய்யாமல் வருடம் தோறும் 4 நாட்கள் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கூட்டத்தின் போது சர்ச்சைகள் எழும்பினால் அதனை வீடியோ பதிவு செய்ய வேண்டும், ஆனால் அது போன்று செய்யாமல் சமரசம் பேசி முடித்துக் கொள்கின்றனர்.