தேனி: தேனி அருகே உள்ள வடபுதுபட்டியில் தனியார் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் ஹேக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கல்லூரியில் பயிலும் சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தப் போட்டியில் கலந்து கொண்டனர்.
கல்லூரி முதல்வர் மற்றும் மாணவிகள் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu) இதில், அரசு துறை சார்ந்த திட்டங்களில் உள்ள குறைகளைக் களைய சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, மாணவர்களுக்கு பல்வேறு தலைப்புகள் கொடுக்கப்பட்டு, அதில் உள்ள தீர்வுகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
குறிப்பாக, ஏஐ தொழில்நுட்பம் மூலம் பல்வேறு போக்குவரத்து விபத்துகளை முன்கூட்டியே அறிந்து அதனை தடுக்கவும், விவசாயம் சார்ந்த பொருட்கள் மூலம் மக்களின் நோய்களைக் குறைக்க உணவுகளை தயார் செய்வது என பல்வேறு கண்டுபிடிப்புகளில் மாணவர்கள் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாணவி விஷ்ணு பிரியா, “ரயில் தண்டவாளங்களில் உள்ள விரிசல்களை ஏஐ தொழில் நுட்பம் மூலம் முன்கூட்டியே அறிந்து, ரயில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றாலும் விபத்துக்களைத் தடுக்க முடியும்” என்றார்.
இதையும் படிங்க:இந்தியாவின் பிரம்மாண்ட ரோபோடிக்ஸ் நவீன மையம் சென்னையில் தொடக்கம்!
மேலும், மாணவி கீர்த்தனா கூறுகையில், “விவசாயப் பொருட்களின் கழிவுகளை வீணாக்காமல் அதனை பயன்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டோம். அவகேடோ பழத்தில் இருந்து வீணாகச் செல்லும் விதையை வைத்து டீ பவுடர் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம், இந்த டீ பவுடர் மூலம் புற்றுநோய் பாதிப்பு மற்றும் டயாபட்டிக் நோயாளிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும்” என தெரிவித்தனர்.
தொட்ரந்து இதுகுறித்து பேசிய கல்லூரியின் முதல்வர் மதலை சுந்தரம், “அரசின் திட்டங்களில் பொதுமக்கள் சந்திக்கக்கூடிய பிரச்னைகள் குறித்த தலைப்புகள் மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டு, அதற்கான தீர்வுகளைக் கண்டுபிடிக்கும் வகையில் ஹேக்கத்தான் நிகழ்ச்சியை நடத்தி வருகிறோம்.
நேற்று காலை தொடங்கிய இந்தப் போட்டி இன்று இரவு 7 மணி வரை இடைவிடாமல் 36 மணி நேரம் நடைபெறும். இந்தப் போட்டியில் சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள முன்னணி நிறுவனங்களின் அலுவலர்கள் கண்காணிப்பில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. டெஸ்லா நிறுவனத்தின் மூத்த வடிவமைப்பாளர் இந்த போட்டியினை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். இந்த போட்டிகளின் மூலம் கிராமப்புற பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளையும், திறமைகளையும் வெளிக்கொண்டு வருவதற்கு உதவியாக இருக்கும்” என தெரிவித்தார்.