சென்னை: தமிழ்நாட்டில் சொத்துக்களுக்கான வழிகாட்டி மதிப்பை நிர்ணயிக்க, பத்திரப்பதிவுத் துறை தலைவர் தலைமையில் மதிப்பீட்டுக் குழு செயல்பட்டு வருகிறது. 2023-2024ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் உரையில், சொத்துக்களின் விலை அதிகரித்துள்ளதால், வழிகாட்டி மதிப்பீட்டை அதிகரிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
மதிப்பீட்டுக் குழு, வழிகாட்டி மதிப்பீட்டை நிர்ணயிக்க கால அவகாசம் எடுத்துக் கொள்ளும் என்பதால், தற்காலிக நடவடிக்கையாக 2017ஆம் ஆண்டு ஜூன் 8ஆம் தேதி வரை அமலில் இருந்த வழிகாட்டி மதிப்பீடு அடிப்படையில் மதிப்பீடு நிர்ணயிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதன் தொடர்ச்சியாக, 2017இல் அமலில் இருந்த வழிகாட்டி மதிப்பீட்டின் அடிப்படையில், புதிய மதிப்பீட்டை நிர்ணயித்து, 2023 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருமென 2023 மார்ச் 30ஆம் தேதி சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டது. இதனை எதிர்த்து, கிரடாய் மற்றும் 3 கட்டுமான நிறுவனங்கள் சார்பில் வழக்குகள் தொடரப்பட்டன.