திருப்பத்தூர்:நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி அமல்படுத்தியதையடுத்து, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில், நாட்டின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி விற்பனையில் பெரும் பங்கு வகிக்கும் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதியில் பெரும்பாலானோர் கிராமப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள். அடிப்படை கல்வி மற்றும் டிஜிட்டல் உலகத்திற்கு பழக்கமில்லாதவர்கள்.
மேலும் இவர்களில் பெரும்பாலானோர் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதியில் உள்ள தோல் தொழிற்சாலையில் பணியாற்றுவதன் மூலமாக கிடைக்கும் மாத வருமானமான பத்தாயிரம் ரூபாயில்தான் தங்களது வாழ்க்கையை நடத்துவதாக தெரிவிக்கின்றனர். இத்தகைய சூழ்நிலையில், ராணிபாபு என்ற மூதாட்டி தனது கணவனை இழந்த நிலையில், தனது மகனான சங்கர் என்பவருடன் ஆம்பூரில் அமைந்துள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள காமராஜர் சாலை 3வது தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
இதுமட்டும் அல்லாது, மூதாட்டி ராணிபாபு பெரியவரிகம் பகுதியில் உள்ள தோல் தொழிற்சாலையில், துப்புரவு பணி செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை, திருச்சியில் ராணிபாபு மார்டன் எண்டர்பிரைஸ் என்னும் நிறுவனத்தை நடத்துவதாகவும், அந்த நிறுவனம் 2 கோடியே 39 லட்சத்து 87 ஆயிரத்து 24 ரூபாய் வரி செலுத்த வேண்டும் எனவும் கடிதம் வந்துள்ளது. இதனை அடுத்து, அதிர்ச்சியடைந்த ராணிபாபு, இந்த கடிதம் குறித்து தனது மகன் சங்கருடன் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து ராணிபாபுவின் மகன் சங்கர் கூறுகையில், "அன்றாடம் கூலி வேலை செய்தால் தான் தங்களது குடும்பமே வாழ முடியும் என்ற சூழல் உள்ள நிலையில், வாடகை வீட்டில் வசிக்கும் எங்களுக்கு 2 கோடி ரூபாய் வரி செலுத்த வேண்டும் என கடிதம் வந்துள்ளது, மிகுந்த அதிர்ச்சியாக உள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என மன வருத்தத்துடன் கோரிகை விடுத்தார்.