சென்னை: ஃபெஞ்சல் புயல் மழை காரணமாக திருவண்ணாமலையில் மலையிலிருந்து பாறை உருண்டு வந்து, வீட்டின் மேல் விழுந்து புதையுண்டதில் ஐந்து குழந்தைகள் உள்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தற்போது, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் தலா ரூ.5 லட்சம் நிதியுதவியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஃபெஞ்சல் புயல் கரையைக் கடந்த பின்னும், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் வரலாறு காணாத கனமழையை எதிர்கொண்டது. இந்த நிலையில், நேற்று முன்தினம் (டிசம்பர் 1) திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் பின்புறம் உள்ள மலையின் அடிவாரப் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது. மேலும், மலை அடிவாரப் பகுதியான வ.உ.சி பகுதிகளில் மண்சரிவு மற்றும் பாறைகள் உருண்டு விழுந்ததில், அப்பகுதியில் உள்ள இரண்டு வீடுகள் இடிபாடுகளில் சிக்கி புதையுண்டது.
சடலங்கள் மீட்பு
தற்போது, அந்த இடிபாடுகளில் சிக்கிய குழந்தைகள் உட்பட 7 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதலும், நிவாரணத் தொகையும் அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் வட்டம், வ.உ.சி. நகர் 11-ஆவது தெருவில் வசித்து வந்த ராஜ்குமார் என்பவரது வீட்டின் மீது டிசம்பர் ஒன்றாம் தேதி மாலை சுமார் 4 மணியளவில் கனமழையின் காரணமாக மரம் விழுந்ததை அறிந்து, அவர் வீட்டின் கதவினை திறக்க முற்பட்டபோது மலையிலிருந்து பெரிய பாறை உருண்டு வந்து வீட்டின் மேல் விழுந்ததில் அவரது வீடு மண் மற்றும் பாறையால் மூடப்பட்டு இடிந்துள்ளது.
இதையும் படிங்க: புதைந்த வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட 5 பேர்.. அதிர்ச்சியில் உறைந்த திருவண்ணாமலை; தலா 5 லட்சம் இழப்பீடு வழங்க அரசு உத்தரவு!
இதனையறிந்த மாவட்ட நிர்வாகத்தினரால் தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அப்படையின் கமாண்டர் உட்பட 39 வீரர்கள் நேற்று முன் தினம் இரவு முதல் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
உயிரிழந்த நபர்களின் விவரம்:
இந்நிலையில், (நேற்று டிச.2) மாலை 6.30 மணியளவில் தேசிய பேரிடர் மீட்புப் படையினரின் முயற்சிகள் பலனளிக்காமல், துரதிஷ்டவசமாக அந்த வீட்டின் உள்ளே இருந்த ராஜ்குமார் மற்றும் அவரது மனைவி மீனா (27), மகன் கௌதம் (9), மகள் இனியா (5), மற்றும் பக்கத்து வீட்டில் வசித்து வரும் சரவணன் என்பவரின் மகள் ரம்யா (7), மஞ்சுநாதன் என்பவரின் மகள் விநோதினி (14) மற்றும் சுரேஷ் என்பவரின் மகள் மகா (7) ஆகிய ஏழு நபர்களும் மண்ணுக்கடியில் சிக்கி உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் முதலமைச்சரின் பொது நிவராண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்.