நீலகிரி: மழை காரணமாக உதகையில் நள்ளிரவில் வீடு இடிந்து விழுந்ததில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தவர் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம், குறித்து உதகை காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், கோத்தகிரி, கூடலூர் போன்ற பகுதிகளுக்கு மாவட்ட நிர்வாகம் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. மேலும், பல இடங்களில் மரங்கள் மற்றும் லேசான மண் சரிவுகளும் ஏற்பட்டுள்ளது.
நள்ளிரவில் தரைமட்டமான வீடு
இந்நிலையில், நேற்று முன்தினம் (டிசம்பர் 01) இரவு மழை காரணமாக உதகை நொண்டிமேடு ஒத்த மரம் பகுதியில் நள்ளிரவில் வீடு இடிந்து விழுந்துள்ளது. இதில், வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த ஆறுமுகம் (45) என்பவர் இடிபாடுகளில் சிக்கியுள்ளார்.
இதையும் படிங்க: கனமழையால் தத்தளிக்கும் விழுப்புரம், புதுச்சேரி..மீட்பு பணியில் ராணுவம்!
இவரை மீட்ட உறவினர்கள், அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் முன்னதாகவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவலறிந்து வந்த உதகை காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், பெய்து வரும் கனமழை காரணமாக உதகை படகு இல்லம் செல்லும் சாலையில், ரயில் பாலத்தின் கீழ் தேங்கிய மழை நீரில் பிக்கப் வாகனம் சிக்கியுள்ளது. மழை நீரில் சிக்கிய பிக்கப் வாகனத்தை பல மணிநேர போராட்டத்திற்கு பிறகு மற்றோரு வாகனத்தின் உதவியுடன் கயிறு கட்டி இழுத்து மீட்டுள்ளனர்.
திருவண்ணாமலை சோகம்
முன்னதாக, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பின்புறம் மண்சரிவு ஏற்பட்டு, மலை அடிவாரத்தில் இருந்த வீட்டின் மீது சுமார் 35 டன் எடை கொண்ட பாறை விழுந்தது. இதனால் வீடு அப்படியே மண்ணுக்கடியில் புதையுண்டது.
இந்த வீட்டில் இருந்த ஐந்து குழந்தைகள் உள்பட 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டது. மண்சரிவில் குழந்தைகள் உள்பட ஏழு பேர் புதையுண்டு மரணித்த சம்பவம் தமிழ்நாடு முழுவதிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், உதகையிலும் ஒருவர் வீடு இடிந்து உயிரிழந்துள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.