திருவண்ணாமலை:இஸ்லாமியர்களைப் பயமுறுத்தி வாக்குகளைப் பெற வேண்டும் என்பதற்காகவே திமுக கூட்டணிக் கட்சிகள் சிஏஏ என்ற ஒரு ஆயுதத்தைக் கையில் எடுத்துப் பயமுறுத்தி வருவதாக, திருவண்ணாமலையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமமுக தலைவர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், "ஒரு சிலரின் பதவி வெறி மற்றும் துரோகத்தினால் அதிமுக தற்போது வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டுள்ளது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சி அதிகாரம், பண பலம், ஆள் பலம் இருந்த போது கூட ஒரு தொகுதியில் மட்டும் தான் வெற்றி பெற முடிந்தது. அவர் செய்த துரோகத்திற்கு வருங்காலத்தில் பொதுமக்கள் தண்டனை தருவார்கள்.
பழனிச்சாமியின் வீழ்ச்சிக்குப் பிறகு அதிமுக மீண்டு எழும், நானும், பன்னீர்செல்வமும் அரசியல் ரீதியாக வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் நாங்கள் இருவரும் ஒன்று சேர்ந்து இருக்கின்றோம். வருங்கால அரசியலில் துரோகம் என்ற வார்த்தையைக் கண்டு அரசியல்வாதிகள் அஞ்சும் படி துரோகம் வீழ்த்தப்படும் என்பதற்கு உதாரணமாகப் பழனிச்சாமியின் வீழ்ச்சி இருக்கும்.
திமுகவையும், பழனிச்சாமியையும் வீழ்த்த பாஜக கூட்டணியில் இடம் பெற வேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பம், அதன்படி நாங்கள் பாஜகவில் இணைந்துள்ளோம். திமுகவின் மூன்றாண்டுக் கால ஆட்சி என்பது சனியிடம் இருந்து பிடுங்கி எமனிடம் அளித்த கதையாக உள்ளது. விவசாயிகள், அரசாங்க ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், செவிலியர்கள் என பல தரப்பினருக்குத் தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து, அதில் 90 சதவிகிதம் நிறைவேற்றாத ஆட்சி, திமுக ஆட்சி.