சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியின் மேயராக இருந்து வரும் ஆர்.பிரியா ராஜனின் தபேதரராக மாதவி என்பவர் இருந்து வந்தார். இவர் கடந்த மாதம் மணலி மண்டல அலுவலகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதற்கு முக்கிய காரணமாக, “தாங்கள் என்னை உதட்டிற்கு பூசுகின்ற சாயம் போடக்கூடாது என்று கூறினீர்கள். நான் உங்களை மீறி பூசினேன். இது குற்றம் என்றால், அது எந்த அலுவலக ஆணையில் உள்ளது என்று தெரியப்படுத்தவும்” என தனக்கு கொடுக்கப்பட்ட மெமோவிற்கு பதிலளித்ததாக மாதவி ஈடிவி பாரத்திடம் கூறினார். இது சென்னை மாநகராட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகம் தரப்பில் விளக்க செய்திக் குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், “பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் அலுவலகத்தில் தபேதார் ஆகப் பணிபுரிந்து வந்தவரிடம், அவரது தனிப்பட்ட நடவடிக்கைகள் குறித்து எந்தவித விளக்கமும் கேட்கப்படவில்லை, விசாரணையும் நடத்தப்படவில்லை. நிர்வாகக் காரணங்களினால் மட்டுமே பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மேயர் அலுவலகத்தில் தபேதார் ஆகப் பணிபுரிந்து வந்த எஸ்.பி.மாதவி என்பவர் தொடர்ந்து அலுவல் நடைமுறைகளை மீறியும், முறையாக அலுவலகத்திற்கு தகவல் தராமல் தாமதமாக வருதல், அலுவலகத்தில் பணிகளை மேற்கொள்ளாமல் இருத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டதன் காரணமாக, அலுவலக நடவடிக்கைகளின்படி கடந்த மாதம் குறிப்பாணையின் மூலம் விளக்கம் கேட்கப்பட்டது.
இதைத் தவிர, தனிப்பட்ட முறையில் அவரது ஒப்பனை குறித்து எவ்வித விளக்கமும் கேட்கப்படவில்லை, விசாரணையும் நடத்தப்படவில்லை. இந்நிலையில், அவரது தனிப்பட்ட ஒப்பனை நடவடிக்கைகளுக்காக பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளதாக சில ஊடகங்களில் செய்தி வரப்பெற்றுள்ளது. இது முற்றிலும் தவறானதாகும்.