தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை மாநகராட்சி பட்ஜெட் 2024-25: என்னென்ன எதிர்பார்ப்புகள்? - சென்னை மாநகராட்சி பட்ஜெட்

Chennai Corporation Budget 2024: சென்னை மாநகராட்சியின் 2024-25ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.

Chennai Corporation Budget 2024 2025
சென்னை மாநகராட்சி பட்ஜெட் 2024 2025

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 21, 2024, 7:44 AM IST

Updated : Feb 21, 2024, 10:07 AM IST

சென்னை:சென்னை மாநகராட்சியின் 2024-25ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா இன்று (பிப்.21) தாக்கல் செய்கிறார்.

முன்னதாக, கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி 2024-25ஆம் நிதியாண்டிற்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட் ஆலோசனைக் கூட்டம் சென்னை மேயர் ஆர்.பிரியா தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், 2024-25ஆம் ஆண்டுக்கான சென்னை பெருநகர மாநகராட்சி பட்ஜெட் தொடர்பாக வெளியிடப்பட்ட 82 அறிவிப்புகளையும் அவர் மதிப்பாய்வு செய்திருந்தார்.

அதில், கல்வித்துறை தொடர்புடைய 27 திட்டங்களில் 7 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு எஞ்சிய 18 திட்டங்களுக்குரிய பணிகள் நடைபெற்று வருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதேபோல, மழைநீர் வடிகால் பணிகளைப் பொருத்தவரை நான்கு திட்டங்களில் ஒரு திட்டம் மட்டும் இதுவரை செயல்படுத்தப்பட்டதாகவும், தவிர பொது சுகாதாரத்துறையில் 8 அறிவிப்புகளில் 3 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளதாகவும் மேயர் ஆர்.பிரியா அப்போது குறிப்பிட்டிருந்தார்.

எதிர்பார்ப்பு: கடந்த ஆண்டு பட்ஜெட்டைப் போலவே, இந்தாண்டு சென்னை மாநகராட்சி பட்ஜெட் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, சென்னையைப் புரட்டிபோட்ட மிக்ஜாம் புயல் பாதிப்புகளால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சென்னையின் பல்வேறு பகுதிகள் தண்ணீரில் தத்தளித்தன. அப்போது, பொதுமக்கள் வெகுநாட்களாக உணவு, குடிநீர், மின்சாரம் உள்ளிட்டவைகள் இன்றி மிகவும் தவிப்புக்குள்ளாகினர்.

இதனிடையே, சென்னை மாநகரில் பல கோடி மதிப்பில் விரிவான மழைநீர் வடிகால் பணிகள் நிறைவேற்றப்பட்டதாக அறிவித்திருந்தபோதும், ஏன் இந்த நிலைமை என பொதுமக்களிடையே அரசை நோக்கி பல்வேறு கேள்விகள் எழுந்தன. இதில், பல்வேறு வகையில் இத்திட்டத்தில் முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் எதிர்க்கட்சிகளும், என்ஜிஓ அமைப்புகளும் பல்வேறு குற்றசாட்டுகளை அரசின் மீது சுமத்தினர்.

இந்த நிலையில், இந்த 2024-25ஆம் நிதியாண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து விவாதங்களும் அறிவிப்புகளும் வெளியாகலாம். கடந்தாண்டு வார்டு வாரியாக வரவு செலவு கணக்குகளும், புதிய திட்டங்கள் குறித்த விபரங்களின் விரிவான அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டன.

அந்தவகையில், இந்தாண்டு எந்த மாதிரியான புதிய திட்டங்கள் இருக்கும் என சென்னை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும், ஆங்காங்கே நடைபெற்றுவரும் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான பணிகள் எப்போது முடிவுறும்? என்பது குறித்தும், அதனைத்தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் நிறைந்த முக்கிய இடங்களில் சாலை மேம்பாடு திட்டத்தின் கீழ் மேம்பாலம் அமைப்பது குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

முன்னதாக, பிப்.19-ல் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடந்த 2023-24 ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தில் சிங்காரச் சென்னை 2.0 திட்டத்திற்கு ரூ.500 கோடியும், பூந்தமல்லியில் ரூ.500 கோடியும், சென்னை மெட்ரோ ரயில் சேவைக்காக ரூ. 12 ஆயிரம் கோடியும், வடசென்னை வளர்ச்சி திட்டத்திற்காக ரூ.1,000 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2024: கவனத்தை ஈர்த்த முக்கிய அறிவிப்புகள்!

Last Updated : Feb 21, 2024, 10:07 AM IST

ABOUT THE AUTHOR

...view details