கோயம்புத்தூர்:இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் போட்டியிட உள்ள வேட்பாளர்களுக்கு, மார்ச் 20ஆம் தேதி முதல் மார்ச் 27ஆம் தேதி வரை வேட்புமனுத் தாக்கல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (மார்.27) வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் என்பதால், அனைத்து மாவட்டங்களிலும் பரபரப்பான சூழல் நிலவியது.
இந்நிலையில் கோவை தொகுதியில், நாம் தமிழர் கட்சியின் கோவை மற்றும் பொள்ளாச்சி வேட்பாளர்கள் நேற்று முன்தினம் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இதைத் தொடர்ந்து, இன்று அக்கட்சியின் மாற்று வேட்பாளர்கள் இரண்டு பேர் வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்துள்ளனர்.
ஒரு வேட்பாளருடன் 5 பேர் உள்ளே செல்ல அனுமதி உள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி சார்பாக வந்த வேட்பாளர்களுடன் மூன்று பேரை மட்டுமே உள்ளே செல்ல போலீசார் அனுமதித்ததாக கூறப்படுகிறது. மேலும், வேட்புமனுத் தாக்கல் செய்ய தேவையான ஆவணங்களைக் கொண்டு சென்றவரை போலீசார் தடுத்து நிறுத்தியதால், போலீசாருக்கும் கட்சியினருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
மேலும் வேட்பு மனுத் தாக்கல் செய்ய திமுக வேட்பாளர் வருவதற்கு முன்னதாகவே, கரை வேட்டி கட்டிய திமுகவினர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நின்று கொண்டிருக்கும் நிலையில், வேட்பு மனுத் தாக்கல் செய்ய ஆவணங்களுடன் வந்த தங்களை போலீசார் தடுத்து நிறுத்துவதாகக் கூறி கட்சியினர் ஆவேசமடைந்தனர். மேலும், தங்களிடம் கூறியது போல பாஜகவினரிடம் கூறுவீர்களா என நாதகவினர் ஆவேசத்துடன் கேள்வி எழுப்பினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோல், தேனியில் பாஜக சார்பில் போட்டியிடும் டிடிவி தினகரன், வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு இன்று தன் ஆதரவாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோருடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்துள்ளார். அப்போது ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் டிடிவி தினகரனுடன் வந்த அவரது ஆதரவாளர்கள் ஏராளமானோர், ஆட்சியர் அலுவலகத்தின் உள்ளே நுழைய முயன்றதால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், டிடிவி தினகரன் ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து போலீசார் ஆட்சியர் அலுவலக கேட்டை இழுத்து மூடி ஆதரவாளர்களை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து டிடிவி தினகரன் வந்த பிரச்சார வாகனத்தில் இருந்த கட்சிக் கொடியை அகற்றிய பின், அவரது பிரச்சார வாகனத்தை மட்டும் போலீசார் ஆட்சியர் அலுவலகத்தின் உள்ளே அனுமதித்தனர்.