தென்காசி: குடும்பங்களில் அப்பா, அம்மா, மாமா, அத்தை எனப் பல உறவுகள் இருந்தாலும் தாத்தா, பாட்டி உறவு என்பது குடும்பத்துக்குக் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். ஆனால் தற்போதுள்ள நவீன காலக்கட்டத்தில் இளம் தம்பதிகள் அடிக்கடி சினிமா செல்வது மற்றும் வெளியூர்களுக்குச் சுற்றுலா செல்வதை விரும்புவார்கள்.
அதில் பெரும்பாலானோர் தங்கள் குழந்தைகளைத் தாத்தா பாட்டிகளிடம் ஒப்படைத்து விட்டுச் செல்வார்கள். அந்த சமயத்தில் தான் குடும்பங்களில் பெரியவர்களின் தேவையும் அவர்கள் நம்மிடம் இருப்பதன் அவசியமும் உணர முடியும். குறிப்பாகத் தாத்தா பாட்டிகள் தனது பேரக்குழந்தைகள் மீது அதிக அக்கறையோடும் அரவணைப்போடும் இருப்பார்கள்.
இதுபோன்ற நிலையில் தென்காசி மாவட்டத்தில் தனது இரண்டரை வயது பேரனை அவனது தாத்தா தனது சைக்கிளின் பின் பகுதியில் உட்கார வைத்து அரவணைப்போடு அழைத்துச் செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பேரன் சைக்கிளில் இருந்து கீழே விழாமல் இருக்கக் தேங்காய் நார் கயிற்றால் அவனைச் சைக்கிளுடன் கட்டியுள்ளார்.
மேலும், சாரல் மழை பெய்து வருவதால் பேரன் மழையில் நினையாமல் இருக்கத் துண்டால் உடலைப் போர்த்தியுள்ளார். ஆனால் அந்த சாரல் மழையில் அவர் நனைந்தபடியே செல்கிறார். இதன் மூலம் தாத்தாவின் உண்மையான அன்பும் அரவணைப்பும் வெளிப்படுகிறது.