தஞ்சாவூர்:கும்பகோணம் அருகே பிரசித்தி பெற்ற சரபேஸ்வர ஸ்தலமாக போற்றிப்படும் அறம் வளர்த்த நாயகி சமேத கம்பகரேஸ்வர சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, தருமபுர ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞான சம்மந்த பரமாச்சாரிய சுவாமிகள் தலைமையில், ஒரே சமயத்தில் 1008 மாணவியர்கள் பங்கேற்ற மாபெரும் பரதநாட்டிய நிகழ்வு இன்று (ஜன.30) சிறப்பாக நடைபெற்றது.
இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பரதநாட்டிய நிகழ்ச்சியை கண்ணார கண்டு ரசித்து மகிழ்ந்தனர். தமிழகத்திலேயே புகழ்பெற்ற சரபேஸ்வரர் ஸ்தலமாக போற்றி வணங்கப்பெறும், கும்பகோணம் அருகேயுள்ள திருபுவனம் கம்பகரேஸ்வர சுவாமி திருக்கோயில் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமானதாகும்.
3-ம் குலோத்துங்கச் சோழனால் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட திருபுவனம் கம்பகரேஸ்வரசுவாமி திருக்கோயில், சச்சிதானந்த விமானம் உட்பட 4 பெரிய கோபுரங்களைக் கொண்டது. இக்கோயிலில் தற்போது 16 ஆண்டுகளுக்கு பிறகு, கும்பாபிஷேக திருப்பணிகள் ரூ.4 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று, நிறைவு பெற்றதையடுத்து மகா கும்பாபிஷேகம் வருகிற பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.