சென்னை :சென்னையில் இருந்து துபாய் செல்வதற்காக எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், தயாராகிக் கொண்டிருந்தது. இந்த விமானம் மூலம், துபாய் செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த பயணிகளை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்து அனுப்பி கொண்டு இருந்தனர்.
அப்போது சென்னையைச் சேர்ந்த சீனிவாசன் (25) என்ற பயணியின் கைப்பையை ஸ்கேன் மூலம் பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்தனர். அந்த பயணியின் கைப்பையில் விமானத்தில் எடுத்து செல்வதற்கு தடை செய்யப்பட்ட ஏதோ ஒரு பொருள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் அந்தப் பயணியின் கைப்பையை தனியே எடுத்து வைத்து திறந்து பார்த்து பரிசோதித்தனர். அதனுள் ஜிபிஎஸ் கருவி ஒன்று இருப்பது தெரியவந்தது. விமான பாதுகாப்புச் சட்டத்தின் படி, விமானத்தில் இந்த கருவியை பயணிகள் எடுத்துச் செல்லக்கூடாது என்ற விதிமுறை உள்ளது.
இதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் அந்த ஜிபிஎஸ் கருவியை பறிமுதல் செய்து அந்த பயணியின் துபாய் பயணத்தையும் ரத்து செய்தனர். மேலும், பயணியையும் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஜிபிஎஸ் கருவியையும் பாதுகாப்பு அதிகாரிகள் சென்னை விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது சம்பந்தமாக சென்னை விமான நிலைய போலீசார் பயணி சீனிவாசனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்