"விவசாய பொருட்களின் மானியங்களை அரசு உயர்த்த வேண்டும்" - விருது பெற்ற விவசாயி பாலமுருகன் கோரிக்கை! சென்னை: இன்று (ஜன.26) சென்னையில் நடைபெற்ற 75வது குடியரசுத் தினவிழாவில், பல்வேறு துறையில் சாதனை படைத்தவர்களைக் கவுரவிக்கும் விதமாக விருதுகள் வழங்கப்பட்டன. அந்தவகையில் "சி நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தித் திறனுக்கான விருது" சேலம் மாவட்டம், பூலாம்பட்டி கிராமம் அடுத்த சின்னப் பில்லுக்குறிச்சியைச் சேர்ந்த விவசாயி பாலமுருகன் என்பவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார்.
இவர் வேளாண் துறையின் மூலம் வழங்கப்பட்ட, நவீனத் தொழில்நுட்ப பயிற்சிகளின் மூலமாகத் திருந்திய நெல் சாகுபடி முறையை நன்கு கற்று, திருந்திய நெல் சாகுபடியைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், தனது வயலில் CR-1009 என்னும் நெல் ரகத்தைப் பயிரிட்டு, நெல் சாகுபடி தொழில்நுட்பங்களை விவரப்படி பின்பற்றியுள்ளார்.
விவசாயி பாலமுருகன் தரமான CR-1009 ரக நெல் சான்று விதைகளை உயிர் உரங்கள் மற்றும் உயிரின பூச்சிக்கொல்லிகள் விதை நேர்த்திகளுக்கு உட்படுத்தி, அவற்றை உட்படுத்தி, அவற்றை முறைப்படி அமைக்கப்பட்ட மேட்டுப்பாத்தி நாற்றங்காலில் விதைப்பு செய்து. 16 நாட்கள் வரை நாற்றங்காலைப் பராமரித்துள்ளார்.
மேலும், தனது நடவு வயலையும் நன்கு உழவு செய்து, பரிந்துரைக்கப்பட்ட தொழு உரம், பசுந்தாள் மற்றும் பசுந்தழை உரங்களை நிலத்தில் இட்டு, மடக்கி உழுது, நீர் பாய்ச்சி நடவு வயலை நன்கு தயார் செய்துள்ளார். இதன் விளவாக, எக்டருக்கு 13 ஆயிரத்து 625 கிலோ நெல் உற்பத்தித் திறன் கிடைக்கப் பெற்றுள்ளது.
திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பங்களை முறையாகக் கடைப்பிடித்து, மாநிலத்திலேயே அதிக நெல் உற்பத்தி செய்த விவசாயியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாலமுருகனுக்கு, 2023ஆம் ஆண்டிற்கான சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தித் திறனுக்கான விருது, அதனுடன் சான்றிதழும், 5 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் மற்றும் 7 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளிப் பதக்கம் ஆகியவற்றைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இந்த நிலையில் விருதுபெற்ற விவசாயி பாலமுருகன் கூறும்போது, "விவசாயத் துறையின் அலுவலர்களின் ஆலோசனையின்படி தொடர்ந்து விவசாயம் செய்து வருகிறேன். திருந்திய நெல் நடவு முறையில் விவசாயம் செய்ததில் அதிகளவில் மகசூல் கிடைத்தது. விவசாய இடு பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. எனவே, விவசாய இடு பொருட்களுக்கு மானியத்தை அதிகரித்துத் தருவதுடன், விளைப் பொருட்களுக்கு உரிய விலையைக் கிடைக்கச் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:குடியரசு தினத்தில் 16 வயது சிறுவனுக்கு வீரதீர செயலுக்கான முதலமைச்சர் விருது.. யார் இந்த நெல்லை டேனியல் செல்வசிங்?