புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை புதிய பேருந்து நிலையம் பின்புறம் இடுகாடு பகுதி அமைந்துள்ளது. இதன் அருகே புதிய பேருந்து நிலையம் பின்புறம் ஏராளமான விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த வழியாக விவசாய வேலைக்குச் சென்ற விவசாயிகள் பாழடைந்த கிணற்றில் அரசுப் பள்ளி சீருடைகள் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதன் பின்னர் இது குறித்து காவல்துறையினருக்கும், வருவாய்த் துறையினருக்கும் தகவல் அளித்தனர். இதற்கு இடையில் அப்பகுதியில் சுற்றித்திரிந்த சிறுவர் சிறுமிகள் அந்த உடைகளை எடுத்துச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் தொடர்ச்சியாக, தகவல் அறிந்த அதிகாரிகள், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆய்வுசெய்து பார்த்த போது, 2018 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை வழங்கவேண்டிய சுமார் 2,500க்கும் மேற்பட்ட சீருடைகள் கிடந்தது தெரியவந்தது. இதேபோல், தஞ்சாவூர் - புதுக்கோட்டைச் சாலை ஓரமாகச் சீமை கருவேலமரங்கள் நிறைந்த காட்டுப் பகுதியில் மூட்டை மூட்டையாக அரசுப் பள்ளி சீருடைகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டதும் தெரியவந்தது.