சென்னை: அண்ணல் அம்பேத்கரின் 69வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அம்பேத்கர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து பாரதியார் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "அண்ணல் அம்பேத்கர் தனது வாழ்க்கையில் பல்வேறு இன்னல்களைத் தாண்டி சாதனை படைத்துள்ளார். அவருக்கு நடந்த சோதனைகள் வேறு ஒருவரது வாழ்வில் நடந்திருந்தால் அவர்களால் இந்த அளவுக்கு முன்னேறி வந்திருக்க முடியாது. பல வேற்றுமைகளை கொண்ட நமது நாட்டை அவரது அரசியலமைப்பு சட்டம் தான் ஒன்றிணைக்கிறது. அனைவருக்கும் சம உரிமை, சமநீதி எப்போதும் கிடைக்க வேண்டும் என்பதற்காக அவர் வாழ்நாள் முழுவதும் போராடியவர்.
பெண்களுக்கு சம உரிமை வழங்கும் சட்டங்களை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் மறுப்பு தெரிவித்ததால் தனது அமைச்சர் பதவிகளை அவர் ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து அம்பேத்கர் தேர்தலில் போட்டியிடும் போது அவர் குறித்து பொய்யான அவதூறுகளை பரப்பி அவரை தோற்கடித்தனர். நம் மக்கள் செய்த பெரிய பாவமே அம்பேத்கர் போன்ற சிறந்த மனிதரை தேர்தலில் தோல்வி அடைய வைத்தது தான்.
இங்கு பல அரசியல் கட்சிகள் சமூக நீதி தங்களது கட்சிக்கு சொந்தமானது போல பேசி வருகின்றனர். வெறும் தனிநபர் பயனுக்காகவும், அரசியல் நலனுக்காகவும் மட்டுமே அம்பேத்கரின் பெயரை தற்போது பலரும் பயன்படுத்தி வருகின்றனர். அவருடைய பெயரை பயன்படுத்தும் பலர் அவருடைய சிந்தனைகளை பின்பற்றுகிறார்களா? என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.