சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவையில் அண்மையில் நடந்த கூட்டத்தொடரில் புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல் மற்றும் காரைக்குடி ஆகிய 4 நகராட்சிகளையும் மாநகராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கு, ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டிருந்த மக்கள்தொகை, வருமான அளவுகளை குறைத்து மாநகராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கான நகர்ப்புற உள்ளாட்சி திருத்த சட்டமசோதா தாக்கல் செய்யப்பட்டது.
அதன்படி, நகர்ப்புற உள்ளாட்சி சட்டப்பிரிவில் மக்கள்தொகையாக இருந்த 3 லட்சம் என்பது 2 லட்சமாகவும், சம்பந்தப்பட்ட பகுதியின் ஆண்டு வருமானம் ரூ.30 கோடியில் இருந்து ரூ.20 கோடியாகவும் குறைக்கப்பட்டு திருத்தம் செய்யப்பட்டது. மேலும், ஊரக உள்ளாட்சிகளை, நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைக்கும் போது அப்பகுதியில் வரும் சொத்துக்கள் உள்ளிட்டவற்றை மாற்றம் செய்வதற்கான சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
அதேபோல், சென்னையில் தனியார் வளாகம் அல்லது ஒரு தனியார் தெருவின் மிக அருகில் உள்ள இடத்தில் இருந்து 30 மீட்டர் தூரத்துக்குள், வாரியத்தின் கழிவுநீர்ப்பாதை இருக்குமானால், அந்த வளாகத்தின் உரிமையயாளர் அல்லது குடியிருப்பவர், தனியார் தெருவின் உரிமையாளர், கழிவுநீரை வாரியத்தின் கழிவுநீர்ப் பாதையில் வெளியேற்றுவதற்காக இணைப்பு பெறுவதை கட்டாயமாக்கும் வகையில் சென்னை குடிநீர் வாரிய விதிகளில் திருத்தம் செய்வதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டது.