சென்னை: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் 23-வது பட்டமளிப்பு விழா, சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இன்று (மார்ச் 13) நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில், தமிழ்நாடு ஆளுநரும், பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஆர்.என்.ரவி மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் துணை தலைமை இயக்குனர் ராகவேந்திர பட்டா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
மேலும், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டங்களை வழங்கினார். இந்த விழாவில், தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும், பல்கலைக்கழகத்தின் இணை வேந்தருமான அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த 23-வது பட்டமளிப்பு விழாவில், 522 மாணவிகள் மற்றும் 644 மாணவர்கள் என மொத்தமாக 1,166 பேருக்கு இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டங்கள் வழங்கப்பட்டன. அவற்றில் 955 பேருக்கு நேரடியாக பட்டங்களையும் மற்றும் அதிக மதிப்பெண்களைப் பெற்ற 253 மாணவர்களுக்கு விருதுகளையும் தமிழ்நாடு ஆளுநரும், பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஆர்.என்.ரவி வழங்கினார்.
இதுமட்டுமல்லாது, இந்த பட்டமளிப்பு விழாவில் 113 பேர் முனைவர் பட்டமும், 148 பேர் எம்விஎஸ்சி முதுநிலை கால்நடை மருத்துவ அறிவியல் நிறைஞர் பட்டமும், 31 பேர் முதுநிலை உணவு தொழில்நுட்பப் பிரிவில் நிறைஞர் (எம்.டெக்.,) பட்டமும், இளநிலை கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு படிப்பில் 602 பேரும், இளநிலை தொழில்நுட்ப படிப்புகளான உணவு தொழில்நுட்பப் பிரிவில் 78 மாணவர்களும், கோழியின தொழில்நுட்பப் பிரிவில் 73 மாணவர்களும், பால்வள தொழில்நுட்பப் பிரிவில் 43 மாணவர்களும் பட்டங்களைப் பெற்றனர்.
மேலும், 78 மாணவர்களுக்கு முதுநிலை பட்டயங்களும் வழங்கப்பட்டது. இதனை தவிர்த்து, தேர்வுகளில் சிறப்பாக செயல்பட்டு தேர்ச்சியடந்த 253 மாணவர்களுக்கு விருதுகளும் வழங்கப்பட்டன. இந்த பட்டமளிப்பு விழாவில் துணைவேந்தர் செல்வகுமார் பேசும்போது, "இளைஞர்கள் அனைவரும் தேர்தலில் நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டும்" என்ற வேண்டுகோளை விடுத்தார். அதற்காக பட்டங்களை பெற்றுக்கொண்ட மாணவர்களும் உறுதிமொழி எடுத்தும் கொண்டனர்.
மேலும், இந்த விழாவில் பல்கலைக்கழக இணை வேந்தரும், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்ட நிலையில், பட்டமளிப்பு விழாவை அமைச்சர் புறக்கணித்தார். சமீபத்தில் நிறைவடைந்த கால்நடை அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தரின் பதவிக்காலத்தை, அரசின் பரிசீலனை இல்லாமல் மேலும் ஓராண்டுக்கு ஆளுநர் நீட்டித்து உத்தரவு பிறப்பித்த நிலையில், இன்றைய பட்டமளிப்பு விழாவை அமைச்சர் புறக்கணித்திருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இதையும் படிங்க:"இந்த காரணங்களுக்கு தான் சிஏஏ-வை எதிர்க்கிறோம்" - இஸ்லாமியர்கள், வழக்கறிஞர் கூறுவது என்ன?