சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் மரபுப்படி ஆண்டின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் துவக்கப்படும். அதன்படி 2025ம் ஆண்டிற்கான ஆளுநர் உரை சட்டப்பேரவையில் இன்று வாசிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு ஆளுநர் ஆர்.என். ரவியை மரபுப்படி நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். அதனை ஏற்றுக் கொண்டு ஆளுநர் இன்று காலை 9.25 மணிக்கு சட்டப்பேரவை வளாகத்திற்கு வந்திருந்தார். அவருக்கு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
அதனைத் தொடர்ந்து காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். அதன் பின்னர் சட்டப்பேரவைக்கு காலை 9.27 மணிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வந்தார். ஆளுநர் ரவி 9.29 மணிக்கு பேரவைக்கு வந்தார். ஆளுநர் ரவி சட்டபேரவைத் தலைவரின் இருக்கைக்கு சென்றதும் தமிழ்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆளுநருக்கு எதிராக காங்கிஸ், தமிழர் வாழ்வுரிமைக் கட்சியினர் சட்டப்பேரவையில் கோஷங்களை எழுப்பினர். அதனிடையே ஆளுநர் பேச முயன்றார். அந்த நேரத்தில் அதிமுகவும் அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்காெடுமையில் யார் அந்த சார் என கேட்டு கோஷம் போட்டனர். இதனால் அவையில் கூச்சல் நிலவியது. இந்த நிலையில் ஆளுநர் 9.33 மணிக்கு சட்டபேரவையில் இருந்து வெளியேறினார்.
உருக்கமான வேண்டுகோள்
ஆளுநர் வெளிநடப்பு செய்துவிட்டு மாளிகைக்கு சென்ற பிறகு ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்தது. அதில், '' தேசிய கீதத்தை மதித்தல் என்பது நமது அரசியலமைப்பில் வகுக்கப்பட்டுள்ள முதலாவது அடிப்படை கடமையாகும். அது அனைத்து சட்டப்பேரவைகளிலும் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் பாடப்படுகிறது. இன்று ஆளுநர் பேரவைக்கு வரும்போது தமிழ்த் தாய் வாழ்த்து மட்டும் பாடப்பட்டது.