கரூர்:நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்ற தேர்தல் உள்ளிட்ட தேர்தல்களை நியமான மற்றும் நேர்மையான முறையில் நடத்த வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதில் ஒரு பகுதியாக வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசு பொருட்கள் உள்ளிட்டவற்றைத் தடுக்கும் பொருட்டு பல்வேறு இடங்களில் பறக்கும் படை அமைத்து தீவிர வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்க வேண்டும், ஓட்டுக்குப் பணம் பெறக்கூடாது உள்ளிட்ட கருத்துகளை முன்வைத்து தன்னார்வலர் அமைப்புகளுடன் இணைந்து நடனம், பாட்டு, மற்றும் மாராத்தான் போட்டிகள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இருப்பினும் பொதுமக்களும் இது போன்ற விழிப்புணர்வுகளை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும் என்ற பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். அதனை சாத்தியப்படுத்தும் விதமாக கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட தான்தோன்றிமலை பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் இணைந்து தனது வீட்டின் முன்பு, 'எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல' (Our Vote Not For Sales) என்ற டிஜிட்டல் பேனர் வைத்துள்ளார்.
இது குறித்து செந்தில்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் கூறுகையில்,"எங்கள் வீட்டில் மொத்தம் 4 வாக்காளர்கள் உள்ளனர். இதற்கு முன்னதாக நடைபெற்ற சட்டமன்றம், நகரப்புற உள்ளாட்சித் தேர்தல் ஆகியவை நடைபெற்ற போது தேர்தல் அன்பளிப்பு மற்றும் வாக்களிக்க பணம் ஆகியவற்றைப் பெற்றுக்கொள்ள மறுக்கும் வகையில், 'எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல' என அறிவிப்பு பலகை வைத்தோம்.
வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தங்களுக்கு யாரும் பணம் மற்றும் பரிசுப் பொருள்களை வழங்க அணுக வேண்டாம் என தெரிவிக்கும் வகையில் இது போன்று செய்துள்ளோம்" என தெரிவித்துள்ளனர். தேர்தல் ஆணையம் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டாலும், அவர்களின் கண்களில் மண்ணை தூவி விட்டு வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருள்களை சில அரசியல் கட்சிகள் தொடர்ந்து வழங்கி வருகின்றன என்ற குற்றச்சாட்டுப் பரவலாக இருந்து வருகிறது. இந்நிலையில், கரூரைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 வாக்காளர்கள், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இது போன்ற டிஜிட்டல் பேனர் வைத்துள்ளது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க:உதவிய இளைஞர்களுக்கு ரயிலில் லிப்ட் கொடுத்த ரயில் பைலட்.. நெல்லையில் நடந்தது என்ன?