அரசு பேருந்து நடத்துநரிடம் வாக்குவாதம் செய்த பாஞ்சாலையின் உறவினர்கள் வீடியோ தருமபுரி:தருமபுரி மாவட்டம், அரூர் பேருந்து நிலையத்திலிருந்து மொரப்பூர், நவலை, காரிமங்கலம், கிருஷ்ணகிரி வழியாக ஓசூர் வரைச் செல்லும் அரசுப் பேருந்தில் கடந்த பிப்.20ஆம் தேதி பாஞ்சாலை(59) என்ற பெண் பயணி பயணம் செய்துள்ளார்.
அப்போது அவர் தூக்கு பாத்திரத்தில் மாட்டிறைச்சியை விற்பனைக்காக எடுத்துச் சென்றுள்ளார். இதையறிந்த பேருந்தின் நடத்துநர் நடு வழியான மோப்பிரிபட்டி வனப்பகுதியில் பேருந்தை நிறுத்தி பாஞ்சாலையை இறக்கி விட்டுள்ளார்.
அப்போது பெண் பயணி, அடுத்த பேருந்து நிறுத்ததில் இறக்குமாறு நடத்துநரிடம் கேட்டும் நடத்துநரும், ஓட்டுநரும் நடுவழியிலேயே இறக்கி விட்டுள்ளனர். இதனால் செய்வதறியாது தவித்த பயணி நடந்தே அருகிலிருந்த பேருந்து நிறுத்தத்திற்குச் சென்று வேறு பேருந்தில் ஏறி வீட்டிற்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து பாஞ்சாலை உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதனால் அவரது உறவினர்கள் மீண்டும் அதே வழியில் வந்த பேருந்தை நிறுத்தி ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் பெண் பயணியைப் பாதுகாப்பில்லாமல் நடு வழியில் இறக்கி விட்ட சம்பவம் போக்குவரத்துக் கழகத்திற்குத் தெரிய வந்ததையடுத்து பேருந்து நடத்துநர் ரகு மற்றும் ஓட்டுநர் சசிகுமார் ஆகியோரிடம் விசாரணை செய்ததில் இருவரும் நடந்த சம்பவத்தை ஒப்புக்கொண்டுள்ளனர்.
அதனால் பேருந்து நடத்துநர், ஓட்டுநர் ஆகிய இருவரையும் மறு உத்தரவு வரும் வரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சேலம் மண்டலம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் சேலம் மண்டலம் தற்காலிக பணியிடை நீக்கம் செய்ததற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், "அரசுப் பேருந்து நடத்துநர் ரகு மற்றும் ஓட்டுநர் சசிகுமார் ஆகிய இருவரை மேற்கண்ட குற்றச்சாட்டுக்காக பணியிலிருந்து தற்காலிக வேலை நீக்கம் செய்யப்படுகின்றது எனவும், இதுகுறித்து குற்றச்சாட்டு குறிப்பானை பின்னர் வழங்கப்படும் எனவும், இந்த உத்தரவு காலத்தில் பணியிடத்தைவிட்டு கிளை மேலாளர் அனுமதியின்றி வெளியே செல்லுதல் கூடாது" என அறிவித்துள்ளது.
இதையும் படிங்க:குமரி மாவட்டத்தில் நளிவடையும் அரசு கேபிள்..! அமைச்சர் மனோ தங்கராஜின் மகன் நெருக்கடி தான் காரணம் - மாவட்ட பஞ்சாயத்து தலைவர் குற்றச்சாட்டு!