சென்னை:முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா இன்று (ஆக.18) மாலை நடைபெற இருக்கிறது. இதில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு நாணயத்தை வெளியிடுகிறார். இதன் காரணமாக, சென்னை முழுவதும் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்கு போக்குவரத்து காவலர்களும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், சென்னை பீச் ஸ்டேஷனலிருந்து தீவுத்திடல் போகும் வழியில் கட்டுப்பாட்டை இழந்த கார், தடுப்புச் சுவரின் மீது ஏறி விபத்துக்குள்ளாகியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காரில் இருந்தவர் மதுபோதையில் காரை இயக்கினாரா? அல்லது காரில் வேறு பிரச்னை உள்ளதா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிர்ஷ்டவசமாக காரில் பயணம் செய்த தரணிதரன் என்பவர் உயிர்தப்பியுள்ளார். இச்சம்பவத்தால் தீவுத்திடல் செல்லும் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து, விபத்துக்குள்ளான காரை அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தும் பணிகளை காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
தண்டையார்பேட்டையில் கர்ப்பிணி சென்ற கார் மீது அரசுப் பேருந்து மோதி விபத்து;
தண்டையார்பேட்டையில் நிறைமாத கர்ப்பிணி பயணம் செய்த கார் மீது அரசுப் பேருந்து மோதியதால் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து போக்குவரத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வடசென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் கௌஷிக். இவர் தனது தாய் மற்றும் சகோதரியுடன் (8 மாத நிறைமாத கர்ப்பிணி) அண்ணாசாலையில் இருந்து வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில், கார் தண்டையார்பேட்டை ஜீவரத்தினம் சாலை வழியாக வந்து கொண்டிருந்த நிலையில், அவ்வழியில் எதிரே வந்த மணலி - பிராட்வே 56d வழித்தட பேருந்து கார் மீது மோதியுள்ளது.