திருவண்ணாமலை :வங்கக்கடலில் உருவாகியஃபெஞ்சல் புயல் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பலத்த காற்றுடன் கனமழை பெய்து வந்தது. இந்த புயலானது இன்று அதிகாலை கரையைக் கடந்தது. இருநாட்களாக தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக, தாழ்வான பகுதிகள் மழைநீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
அந்தவகையில், திருவண்ணாமலை மாவட்டத்திலும் புயல் காரணமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் திருவண்ணாமலை நகரப்பகுதிகளில் சுமார் 22 செ.மீ மழையும், ஜமுனா மரத்தூர் பகுதியில் மட்டும் 21 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது. அதுமட்டுமின்றி இன்று திருவண்ணமலை மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையில் அரசுப்பேருந்து ஒன்று நகர முடியாமல் சிக்கிக் கொண்ட நிகழ்ச்சி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. சுமார் 15 மணி நேரத்திற்கு மேலாகியும் அரசு பேருந்தை மீட்க முடியவில்லை.
வேலூர் பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று மாலை போளூர் நோக்கி 777 தடம் எண் கொண்ட அரசுப் பேருந்து ஒன்று புறப்பட்டுள்ளது. அமிர்தி இடையே வேலாந்தூர் என்ற இடத்திற்கு பேருந்து வரும் போது, ஜவ்வாது மலைத் தொடரில் பெய்த கனமழையினால், அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வெள்ளப்பெருக்கு காரணமாக போளூர் செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கியதால், அவ்வழியாக வந்த அரசுப் பேருந்தானது முன்னேயும் செல்ல முடியாமல், பின்னேயும் செல்ல முடியாமல் தத்தளித்த படியே நின்றுள்ளது.
இதையும் படிங்க :"விழுப்புரத்தில் அதிகபட்சமாக 51 செ.மீ மழை.. 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்" - சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
மேலும், பேருந்தின் கடைசி ட்ரிப் என்பதால், 15 பயணிகள் மட்டுமே பேருந்தில் இருந்துள்ளனர். பேருந்து வெள்ளநீரில் சிக்கிக்கொண்ட தகவல் மீட்பு படையினருக்கு தெரிவிக்கவே, பின்னர் மீட்பு படையினர் மூலம் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். ஆனால், தொடர்ந்து கனமழை பெய்ததால் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரை மீட்க முடியவில்லை.
இருப்பினும் இருவரும் பேருந்தில் பாதுகாப்புடன் உள்ளதாக போளூர் பணிமனை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. சுமார் 15 மணி நேரத்திற்கு மேலாகியும் இருவரையும் மீட்க முடிவில்லை. மேலும், பேருந்தில் இருக்கும் ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு உணவு, தண்ணீர், மருத்துவ உதவி மற்றும் வேறு ஏதேனும் உதவி தேவைப்படுகிறதா என்ற விவரம் தெரியாமல் அதிகாரிகள் தவித்துப் போய் உள்ளனர்.
மாவட்ட ஆட்சியர் பங்களாவின் காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்தது (Credits - ETV Bharat Tamil Nadu) இடிந்து விழுந்த கலெக்டர் பங்களா சுவர்: இதனிடையே தற்போது பெய்துவரும் கனமழையின் காரணமாக, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பங்களாவின் காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்து தண்ணீர் உள்ளே செல்லும் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.