தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரக்கோணம் அருகே கூலித்தொழிலாளி வீட்டில் புதைத்து வைத்திருந்த தங்க பிஸ்கட்… 4 பேர் கைது!

Ranipet news: அரக்கோணம் அடுத்த கைனூரில் கூலித் தொழிலாளி வீட்டின் பின்புறம் புதைத்து வைத்திருந்த தங்க பிஸ்கட், வெள்ளி கொலுசு மற்றும் 10 லட்சம் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து இவ்வழக்கு தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

அரக்கோணம் அருகே கூலித் தொழிலாளி வீட்டில் புதைத்து வைத்திருந்த தங்க பிஸ்கட்
அரக்கோணம் அருகே கூலித் தொழிலாளி வீட்டில் புதைத்து வைத்திருந்த தங்க பிஸ்கட்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 21, 2024, 11:59 AM IST

ராணிப்பேட்டை: அரக்கோணம் அடுத்த கைனூர் இருளர் குடியிருப்பைச் சேர்ந்தவர் முருகன் (59). இவரது மனைவி கவுரி (50). இருவரும் அரக்கோணம் மசூதி தெருவில் உள்ள நகைக்கடைகள் அடங்கிய பகுதியில், கழிவுநீர் கால்வாய் மண்ணை தண்ணீருடன் சேர்த்து சலித்து எடுக்கும் தொழிலைச் செய்து வருகின்றனர். கழிவுநீர் சலித்தபோது அவர்களுக்கு ஒரு தங்க பிஸ்கட் கிடைத்துள்ளது.

இந்த தங்க பிஸ்கட்டில் ஒரு பகுதியை வெட்டி எடுத்து சோளிங்கர், திருத்தணி, அரக்கோணம் ஆகிய ஊர்களில் உள்ள நகைக்கடை வியாபாரிகளிடம் விற்று பணமாக்கியுள்ளனர். அந்த பணத்தில், முருகன் தனது தொகுப்பு வீட்டை புதுப்பித்து, எல்இடி டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற பொருட்களை வாங்கி வைத்துள்ளார். திடீர் பணக்காரராக மாறிய முருகன் மீது அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில், அரக்கோணத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தங்க பிஸ்கட் வேண்டி கத்தியைக் காட்டி மிரட்டி உள்ளனர். இதனையடுத்து முருகன், ஊராட்சி மன்றத் தலைவர் உமா மகேஸ்வரியிடம் புகார் தெரிவித்துள்ளார். பின்னர் உமா மகேஸ்வரி, அரக்கோணம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அதன்பேரில், இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையிலான போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது முருகன் தானாகவே தனது வீட்டின் பின்புறம் மரத்தின் அடியில் மண்ணைத் தோண்டி புதைத்து வைத்திருந்த தங்க பிஸ்கட் மற்றும் ஒரு பையில் புதைத்து வைத்திருந்த ரொக்கப் பணம் ரூபாய் ஒரு லட்சத்து 10 ஆயிரத்தை எடுத்து போலீசாரிடம் கொடுத்துள்ளார்.

அதைத் தொடர்ந்து அரக்கோணம் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து முருகனை விசாரித்ததில், அரக்கோணம் மசூதி தெரு அருகில் கழிவுநீர் கால்வாய் மண்ணை சலித்தபோது தங்க பிஸ்கட் கிடைத்ததாக தெரிவித்துள்ளார். இவ்வாறு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள், அரக்கோணம் சார் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட உள்ளதாக கூறினர்.

மேலும் முருகனிடம் அதிக அளவு பணம் இருப்பதாக அவரது உறவினரான கைனூரைச் சேர்ந்த மனோஜ் (24) என்பவர், தனது நண்பர்களான திருவள்ளூர் மாவட்டம் திருவலாங்காடு அரிச்சந்திராபுரத்தைச் சேர்ந்த சுரேஷ் (28), சரவணன் (24), அரக்கோணம் மோசூரைச் சேர்ந்த ஜெயக்குமார் (26) ஆகியோருக்கு தகவல் தெரிவித்து, முருகனிடம் தங்க பிஸ்கட் வேண்டி மிரட்டி உள்ளனர். இது தொடர்பாக முருகனிடம் புகார் பெற்று இவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

இதையும் படிங்க:2019-ல் நடந்த கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை - கும்பகோணம் நீதிமன்றம் உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details