தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் ஈரோடு: ஈரோடு திண்டலில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற மாநில அளவிலான கரேத்தே போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி இன்று (ஜன.28) நடைபெற்றது. இதில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பரிசுகளை வழங்கினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன், "விமான பயணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் விமானங்களில் குடித்து விட்டு பயணம் செய்பவர்களால் சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகின்றது. இதுகுறித்து மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு சார்பில் திறக்கப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அவசர கதியில் திறக்கப்பட்டது.
அதனை பயணிகள் வசதிக்கு ஏற்ப முறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேகதாது அணைக்கு ஒரு போதும் மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது. இதற்கு தமிழக அரசு ஒருபோதும் துணை போகக் கூடாது. தேர்தல் கூட்டணிகளை பொறுத்தவரையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி காலம் தாழ்த்தாமல் அறிவிக்கும்.
தற்போது மக்கள் சந்திப்பு அதிகரித்து வரும் நிலையில், பிப்ரவரி 3ஆம் தேதி அனைத்து அணிகளின் செயல்வீரர்கள் கூட்டம் நடத்தப்பட்டு, அம்மாத இறுதியில் செயற்குழு கூட்டம் கூட்டப்பட்டு மக்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் முடிவுகள் அறிவிக்கப்படும். திமுக கூட்டணியை வெல்லும் வகையில் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெறும்.
இந்தியா கூட்டணியில் உள்ள தலைவர்கள் உதட்டு அளவில் தான் பேசி வருகிறார்களே தவிர, உள்ளத்தில் இருந்து பேசவில்லை. அந்தக் கூட்டணியின் நோக்கம் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்று உள்ளதே தவிர்த்து, காங்கிரஸ் கட்சி மீது நம்பிக்கை இல்லை என்று கூட்டணியில் இடம் பெற்றுள்ள மாநில கட்சிகளே சொல்கிறார்கள்.
பீகார் மாநிலத்தின் முதலமைச்சர் நிதிஷ்குமார் அனுபவமிக்க மூத்த அரசியல் தலைவர். நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் மாநில மக்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் நிதிஷ்குமார் தற்போது ராஜினாமா நடவடிக்கையை எடுத்துள்ளார். இந்திய அளவில் பாஜக பிரகாசமாக செயல்பட்டு வருவதுடன், தமிழகத்தில் பாஜக கூட்டணி முடிவு செய்வது என்பது மத்தியில் உள்ள தலைவராக தான் இருக்கிறார்கள்.
இந்தியாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த ஒரு வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றால் அது தமிழகத்தில் உள்ள திமுக அரசாக தான் இருக்கும். இது நிச்சயமாக நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும். மேலும் இந்தியா ஜனநாயக நாடாக இருப்பதால், நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்கு எந்த தடையும் இல்லை என்பது தான் எனது கருத்து" என்று ஜிகே வாசன் தெரிவித்தார்.