தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாக்கு வங்கி அரசியலுக்காக பாஜக மீது திமுகவினர் குற்றம்சாட்டுகின்றனர் - ஜி.கே.வாசன் - lok sabha election 2024

Lok Sabha election 2024: நயினார் நாகேந்திரன் மீது தெரிவிக்கப்பட்ட புகாரை வைத்து வாக்கு வங்கி அரசியலுக்காக பாஜக மீது திமுகவினர் குற்றம்சாட்டுகிறது என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி கே வாசன் கூறியுள்ளார்.

ஜி கே வாசன்
ஜி கே வாசன்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 15, 2024, 7:32 PM IST

வாக்கு வங்கி அரசியலுக்காக பாஜக மீது திமுகவினர் குற்றம்சாட்டுகின்றனர்

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி கே வாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இந்தியாவிற்குத் தேவையான ஆக்கப்பூர்வமான தேர்தல் அறிக்கையை பாஜக வெளியிட்டுள்ளது. குறிப்பாகப் பெண்கள் முன்னேற்றம், நாட்டின் முன்னேற்றம் என்பதை வருங்காலங்களில் நிரூபிக்கும் வகையில், இந்த தேர்தல் அறிக்கை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகளுக்கும், தொழில்துறைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது.

தமிழ் மொழிக்குப் பிரதமர் வைத்திருக்கின்ற மரியாதையை தன்னுடைய தேர்தல் அறிக்கையில் அங்கீகாரம் கொடுத்திருக்கிறார். தமிழ், தமிழர்கள், கலாச்சாரம், பண்பாட்டிற்கு, முக்கியத்துவம் கொடுப்பவர் பிரதமர், அது தேர்தல் அறிக்கையில் பிரதிபலிக்கிறது.

திருக்குறள் பண்பாட்டு மையம் என்பது தமிழுக்கு மேலும் கிடைக்கின்ற பெருமை. கச்சத்தீவு பிரச்சனை என்பது நம்முடைய மீனவர்களுடைய முக்கியமான பிரச்சனை. கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்தது வரலாற்று மிக்க தவறான செயல்பாடு, காங்கிரஸ் ஆட்சியிலிருந்த போது தான் இந்த நிலை ஏற்பட்டது.

அன்றைக்குத் திமுக, காங்கிரஸ் கட்சியினையுடைய முடிவுக்கு உடந்தையாக இருந்ததே தவிர, மீனவர்களுக்காக அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இன்றைக்கு அவர்கள் வாக்கு வங்கிக்காகக் காங்கிரஸ் கட்சியோடு சேர்ந்து நீலிக்கண்ணீர் வடிக்க நினைக்கிறார்கள்.

எந்த விதமான ஆதாரங்களும் இல்லாமல் தமிழ்நாடு அரசு பாஜகவின் மீது தேர்தல் நேரத்தில் களங்கம் விளைவிக்க வேண்டும் என்பதற்காகத் திருநெல்வேலி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது குற்றம் சாட்ட நினைக்கிறது. காவல்துறையை வைத்து அழுத்தம் கொடுத்து, வாக்கு வங்கி அரசியலுக்கு அவர்கள் செய்யக்கூடிய தவறான காரியங்கள் எடுபடாது.

அண்ணாமலை திமுகவின் தவறுகளைப் புள்ளி விபரங்களோடு தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டு இருக்கிறார், அதன் அடிப்படையில் வாக்காளர்களுக்கு நிறைய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இதனை ஜீரணிக்க முடியாத திமுக, அண்ணாமலை மீது வழக்குத் தொடர்ந்தால் இது போன்ற நிலை மாறும் என்று நினைக்கிறார்கள். மக்கள் மனதில் ஆழமாக திமுகவின் தவறுகள் பதிந்திருக்கிறது, எதிர்மறை வாக்குகளைப் பெற எங்களுடைய தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் மீது வழக்குப் போடுவதால் அவர்களால் இனி மாற்ற முடியாது.

இந்தியா என்றால் இந்தியர்கள் என்று அர்த்தம், அதைப் பிரித்துப் பார்ப்பது திமுகவிற்கு வழக்கமாகிவிட்டது, பழக்கமாகிவிட்டது. திமுகவைச் சேர்ந்த நண்பர்கள், மத்திய அரசு என்பதை மறந்து ஒன்றிய அரசு என்று கூறிய பிறகு தவறான கண்ணோட்டத்தில் இந்தியாவைப் பார்க்கிறார்கள்.

தமிழ்நாட்டில் நான்கு அணிகளில் முதல் அணியாகத் தேசிய ஜனநாயகக் கூட்டணி செயல்படுகிறது என்றும், மேகதாது என்ற பெயரில் அணை கட்ட நினைக்கும் கர்நாடக அரசுக்கு சட்டரீதியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மத்திய அரசு ஒரு போதும் கர்நாடக அரசுக்கு அனுமதி கொடுக்கக்கூடாது" என பேசினார்.

இதையும் படிங்க: தமிழ் வருடப் பிறப்பை முன்னிட்டு சுவாமிமலை திருக்கோயிலில் சிறப்புப் பூஜை.. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்! - Tamil Year Special Pooja

ABOUT THE AUTHOR

...view details