சென்னை : சினிமா பைனான்சியரான ககன்போத்ரா சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "சினிமா பைனான்சியரான எனது தந்தை முகுந்த் போத்ரா, திரைப்பட இயக்குநரான ஆர்.கிருஷ்ணமூர்த்தி என்ற கஸ்துாரி ராஜாவுக்கு எதிராக ரூ.65 லட்சம் செக் மோசடி (cheque) வழக்கு தொடர்ந்திருந்தார்.
எனது தந்தை இறப்புக்குப் பிறகு, இந்த வழக்கை நான் தொடர்ந்து நடத்தி வருகிறேன். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், கஸ்தூரி ராஜா ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் எனக்கு எதிராக பொய்யாக ஒரு வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அந்த வழக்கில், அவர் கொடுத்த நிரப்பப்படாத செக்கை நானும், எனது தந்தையும் நிரப்பி அவரை மோசடி செய்துள்ளதாக பொய்யான குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க :இ-பாஸ் நடைமுறையை முறையாக அமல்படுத்தாதது ஏன்?அரசு மீது நீதிமன்றம் அதிருப்தி!
அந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. எனவே எனக்கும், எனது தந்தையின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தியதற்காகவும், எங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காகவும் ரூ.1 கோடி இழப்பீடு வழங்க கஸ்தூரி ராஜாவுக்கு உத்தரவிட வேண்டும் எனவும், அத்துடன் அவர் மீது குற்றவியல் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அந்த மனுவில் கூறி இருந்தார்.
இந்த மனு ஜார்ஜ் டவுன் 8வது பெருநகர குற்றவியல் நடுவர் தாமோதரன் முன் இன்று( அக் 14) விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, திரைப்பட இயக்குநரான ஆர்.கிருஷ்ணமூர்த்தி என்ற கஸ்துாரி ராஜா வரும் நவ.15ம் தேதியன்று நேரில் ஆஜராக சம்மன் பிறப்பித்து உத்தரவிட்டார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்