சென்னை:சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்பனை அதிகளவில் நடப்பதால் நாளுக்கு நாள் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பெருங்களத்தூர் பீர்க்கங்கரணை காவல் நிலையத்தில் புகார் வந்த வண்ணம் இருந்த நிலையில், துணை ஆணையாளர் பவன்குமார் உத்தரவின் பெயரில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கஞ்சா விற்பனை செய்பவர்களை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், பீர்க்கங்கரணை காவல் எல்லைக்குட்பட்ட பகுதியான முடிச்சூர், லட்சுமி நகர், மணிவாக்கம் பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்களை குறி வைத்து தகவல்கள் பெறப்பட்டு விசாரணை மேற்கொண்டபோது, லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த தீபக் (26) என்பவர்தான் இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வருவதாக தெரிய வந்துள்ளது.
உடனே அவரை கைது செய்ய வீட்டுக்குச் சென்று பார்த்த போது வீட்டில் ஆள் இல்லாததால், தீபக்கின் தொலைபேசி எண்ணை காவல் துறையினர் ஆய்வு செய்து பார்த்த போது, ஆந்திராவில் இருப்பது தெரியவந்துள்ளது. பின் உடனடியாக தனிப்படை போலீசார் தீபக்கை தீவிரமாக கண்காணித்து வந்த நிலையில், ஆந்திராவில் இருந்து லட்சுமி நகர் பகுதியில் இருப்பதாக மொபைல் சிக்னல் அலர்ட் கொடுத்ததை தொடர்ந்து, தனிப்படை காவல் துறையினர் விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்ட போது, தீபக், லட்சுமி நகர் அடையாறு ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள மதகு அருகில் இருப்பது சிக்னல் காட்டியுள்ளது.
பின் அந்த இடத்திற்குச் சென்ற தனிபடை காவல்துறையினர், தீபக் மற்றும் அவருடைய கூட்டாளிகள் கஞ்சாவை பொட்டலம் போட்டுக் கொண்டு இருந்ததை கண்டுள்ளனர். அப்போது போலீசாரைப் பார்த்தவுடன் கஞ்சாவை போட்டுவிட்டு மதகு மேல் ஏறி தப்பிக்க முயற்சி செய்தபோது சுமார் 30 அடி உயரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தனர். இதில் தீபக் மற்றும் அவரது கூட்டாளியான மண்ணிவாக்கம் பகுதியைச் சேர்ந்த சந்துரு (25) இருவருக்கும் கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
உடனடியாக அவர்களை மீட்ட போலீசார், குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்
மாவு கட்டு போட்டதை தொடர்ந்து பீர்க்கங்கரணை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
அதில், “கடந்த ஐந்து வருடங்களாக தீபக் மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து ஆந்திராவிற்குச் சென்று அங்கு மொத்தமாக கஞ்சாவை வாங்கி வந்து, தாம்பரம், வண்டலூர், மணிவாக்கம், முடிச்சூர், மணிமங்களம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு குறைந்த விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. மேலும், அந்த கஞ்சா விற்பனை செய்யும் பணத்தில் தீபக் அவரது கூட்டாளிகளை கூட்டிக்கொண்டு ரிசார்ட்டுக்குச் சென்று உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது.