தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஏழு வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி; திமுக தலைமையை அதிர வைத்த நெல்லை மேயர் தேர்தல்! - tirunelveli mayor G Ramakrishnan - TIRUNELVELI MAYOR G RAMAKRISHNAN

Tirunelveli mayor election: திருநெல்வேலி மாநகராட்சி மேயர் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட ராமகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில், அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவின் மற்றொரு கவுன்சிலர் பவுல்ராஜ் 23 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தாலும், அவருக்கு கிடைத்துள்ள வாக்குகள் திமுக தலைமையை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

நெல்லை மேயர் ராமகிருஷ்ணன்
நெல்லை மேயர் ராமகிருஷ்ணன் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 5, 2024, 6:22 PM IST

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சி மேயரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடந்தது. இதில் திமுக மேயர் வேட்பாளரான கிட்டு என்ற ராமகிருஷ்ணன் 30 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவரை, எதிர்த்து போட்டியிட்ட திமுகவின் மற்றொரு கவுன்சிலர் பவுல்ராஜ் 23 வாக்குகள் பெற்று தோல்வியடைந்துள்ளார்.

நெல்லை மேயர் ராமகிருஷ்ணன் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

திருநெல்வேலி மாநகராட்சி மேயராக இருந்த திமுகவை சேர்ந்த பி.எம்.சரவணனுக்கும், திமுக கவுன்சிலர்களுக்கும் இடையே தொடர்ந்து மோதல்போக்கு நிலவியது. இதனால், மாநகராட்சி கூட்டங்களை சுமுகமாக நடத்த முடியாத நிலை இருந்தது. இதையடுத்து கடந்த மாதம் மேயர் பதவியை பி.எம்.சரவணன் ராஜினாமா செய்தார்.

தொடர்ந்து திருநெல்வேலி மாநகராட்சியின் மேயர் வேட்பாளர் தேர்வு தொடர்பாக அமைச்சர்கள் கே.என்.நேரு, மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் தலைமையில் திமுக கவுன்சிலர்கள் கூட்டம் நேற்று (ஆகஸ்ட்4) நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பிறகு திருநெல்வேலி மாநகராட்சி திமுக சார்பில் 25வது வார்டு உறுப்பினர் ராமகிருஷ்ணன்(எ) கிட்டு மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

ராமகிருஷ்ணனை மேயர் வேட்பாளராக அறிவித்த நிலையில், இன்று காலை 10:00 மணிக்கு வேட்புமனு தாக்கல் துவங்கியது. திமுக அறிவித்த வேட்பாளரான கிட்டு என்ற ராமகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல் செய்ய வருகை புரிந்தார். அவர் வருவதற்கு முன்பாகவே, மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்த 6-வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் பவுல்ராஜ் மேயர் பதவிக்கு வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.

இதைத் தொடர்ந்து இவர்களின் வேட்புமனு பரிசீலினை நடைபெற்றது. காலை 11:30 மணி முதல் 12 மணி வரையில் வேட்பு மனு வாபஸ் பெறலாம் என்று கூறப்பட்டது. ஆனால், இருவருமே வாபஸ் பெறவில்லை என்பதால், பிற்பகல் 12:00 மணிக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் மாநகராட்சி ஆணையாளர் சுகபுத்ரா தலைமையில் நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகராட்சியில் உள்ள 55 மாமன்ற உறுப்பினர்களில் 54 பேர் மறைமுக தேர்தலில் பங்கேற்றனர். அதிமுக மாமன்ற உறுப்பினர் ஜெகநாதன் மட்டும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. வாக்குப்பதிவை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்றதில் திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் ராமகிருஷ்ணன் 30 வாக்குகள் பெற்று மேயராக தேர்வானார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பவுல்ராஜ் 23 வாக்குகள் வாக்குகளை பெற்று தோல்வியடைந்துள்ளார்.

இதனையடுத்து, தேர்தலில் 7 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்ற ராமகிருஷ்ணனை மேயராக தேர்தல் நடத்தும் அலுவலர் சுகபுத்திரா அறிவித்தார். அதை தொடர்ந்து அவருக்கு வெற்றி சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் திமுகவின் அதிகாரபூர்வ வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்ட மற்றொரு திமுக கவுன்சிலர் பவுல்ராஜ் கிட்டத்தட்ட 50% வாக்குகள் வாங்கிய சம்பவம் திமுகவினரிடையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, நேற்று நடைபெற்ற கூட்டத்தில் கவுன்சிலர் பவுல்ராஜ் பங்கேற்கவில்லை. எனவே அவர் கட்சி வேட்பாளருக்கு எதிராக போட்டியிடுவார் என தெரிய வந்ததால், அமைச்சர் தங்கம் தென்னரசு அவரை தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு பேசியதாக கூறப்பட்டது.

ஆனால், இன்று நடைபெற்ற தேர்தலில் பால்ராஜ் மனு தாக்கல் செய்தார். இருப்பினும், கட்சி தலைமை ராமகிருஷ்ணனை தேர்வு செய்திருப்பதால் பெரும்பாலான திமுக கவுன்சிலர்கள் ராமகிருஷ்ணனுக்கு வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மொத்தம் வாக்களித்த 54 கவுன்சிலர்களில் 23 பேர் பவுல்ராஜுக்கு வாக்களித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.

புது மேயருக்கும் எதிர்ப்பு?:இதன் மூலம் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள மேயர் ராமகிருஷ்ணனுக்கும் திமுகவில் எதிர்ப்பு இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், இதுகுறித்த தகவல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரை சென்றதாக கூறப்படுகிறது. எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் கட்சித் தலைமைக்கு கட்டுப்பட்டு, சுமூகமாக தேர்தல் நடத்தி முடிக்க திமுக மாவட்ட செயலாளருக்கும், அமைச்சர்களுக்கும் திமுக தலைமை உத்தரவிட்டிருந்தது. ஆனால் வழக்கம் போல் கட்சி தலைமையை மீறி கவுன்சிலர்கள் செயல்பட்டு இருப்பதால் திமுக தலைமை மேலும் அதிர்ச்சி அடைந்துள்ளது.

தேர்தல் வெற்றி குறித்து புதிய மேயர் ராமகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ இந்த வெற்றியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், உதயநிதி ஸ்டாலினுக்கும் சமர்ப்பிக்கிறேன். எனக்கு ஓட்டு போடாதவர்களுக்கும் சேர்த்து நான் பணியாற்றுவேன். சாதாரண தொண்டராக இருந்த எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருப்பது பெருமகிழ்ச்சியை தருகிறது. சிறப்பாக செயல்பட்டு சென்னை மாநகராட்சிக்கு இணையாக நெல்லை மாநகரப் பகுதியை தரம் உயர்த்துவேன்” என்று அவர் கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: கவுன்சிலர் டூ மேயர் வேட்பாளர்; நெல்லையை சைக்கிளில் வலம் வரும் ராமகிருஷ்ணனின் பின்னணி என்ன? - NELLAI MAYOR CANDIDATE RAMAKRISHNAN

ABOUT THE AUTHOR

...view details